ஐநா சபையில் ஒலித்த ஓம் சாந்தி: இந்தோனேசியா அதிபர் சொன்னதும் கவனித்த உலக தலைவர்கள்!
ஐநா சபையில் ஒலித்த ஓம் சாந்தி: இந்தோனேசியா அதிபர் சொன்னதும் கவனித்த உலக தலைவர்கள்!
ADDED : செப் 24, 2025 02:23 PM

நியூயார்க்: ஐநாவில் தன் உரையை முடிக்கும் போது, 'ஓம் சாந்தி, சாந்தி ஓம்' என்று இந்தோனேசியா அதிபர் சொல்லி முடித்தார். அதனை சற்று உலக நாட்டு தலைவர்கள் உன்னிப்பாக கவனித்தனர்.
ஐ.நா., பொதுச்சபையில் இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் அதிபர் பிரபாவோ சுபியான்டோ 19 நிமிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இனவெறி, வெறுப்பு ஆகியவை நமது எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது. அமைதிக்கு பாதுகாவலர்கள் தேவைப்படும் இடத்தில் எங்கள் வீரர்களை சேவையை அனுப்ப தயாராக இருக்கிறோம்.
குறிப்பாக காசாவில் அல்லது பாலஸ்தீனத்தின் வேறு இடங்களில் அமைதியை பாதுகாக்க அனுப்ப தயாராக உள்ளோம். காசா பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். காசாவில் அப்பாவி மக்களுக்கு உதவ வேண்டும்.
உலகத்தில் முடிவில்லாத போர்கள் மற்றும் வன்முறை அதிகரிக்கும் போது ஆபத்தான சூழ்நிலை உருவாகும். எந்தவொரு அரசியல் மோதலுக்கும் வன்முறையைப் பயன்படுத்த கூடாது. ஏனெனில் வன்முறை அதிக மோதலை மட்டுமே உருவாக்கும். இதற்கு தீர்வு அனைவரும் ஒன்றாக வாழ்வதுதான். இந்தக் கனவை நனவாக்குவதில் இந்தோனேசியாவும் தனது பங்களைப்பை வழங்கும்.
இந்த உன்னத இலக்கை நோக்கி நாம் உழைப்போம். இவ்வாறு இந்தோனேசியாவின் அதிபர் பேசினார். தன் உரையை முடிக்கும்போது, 'ஓம் சாந்தி, சாந்தி ஓம்' என்ற சமஸ்கிருத மந்திரத்தை சொல்லி முடித்தார். இதனை ஐ.நா., பொதுச்சபையில் கூடியிருந்த பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் உன்னிப்பாக கவனித்தனர்.
இந்தோனேசியா, ஹிந்து கலாசாரப் பாரம்பரியம் கொண்ட நாடு. மக்களில் பெரும் பான்மையானோர் இஸ்லாமியர்களாக இருந்தபோதும், மூதாதையர்களின் ஹிந்து பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் தொடர்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அங்குள்ள பாலி தீவில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.