வெளிநாட்டு சக்திகளால் உருவாக்கப்பட்ட 'டூல்கிட்' நாங்கள் கிடையாது; ராகுலை விளாசிய நிதின் நபின்
வெளிநாட்டு சக்திகளால் உருவாக்கப்பட்ட 'டூல்கிட்' நாங்கள் கிடையாது; ராகுலை விளாசிய நிதின் நபின்
ADDED : நவ 22, 2026 05:21 PM

சண்டிகர்: எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி குறித்து சண்டிகரில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் உரையாற்றினார். அப்போது, ராகுலையும், காங்கிரஸ் கட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது; எஸ்ஐஆர் குறித்து நாட்டில் விவாதம் நடந்து வருகிறது. ஓட்டுகள் திருடப்படவில்லை. தங்களது ஓட்டு வங்கி இழந்து விட்டதாக உணர்பவர்களே ஓட்டு திருடப்பட்டதாகக் கூறி வருகின்றனர். 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து பேசப்படுகிறது. உயிரிழந்த 3 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 6 கோடி பேரின் பெயர்கள் இரு வேறு முகவரியில் இடம்பெற்றிருந்தன. அவை நீக்கப்பட்டுள்ளன. இந்தப் போலி ஓட்டுகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்று நம்பியவர்களே இன்று பதற்றமடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்கு எங்கும் செல்வாக்கு இல்லை. எப்போதாவது சில இடங்களில் வெற்றி கிடைக்கலாம். சண்டிகரில் அதுபோன்ற வெற்றி எதுவும் கிடைக்காது. டில்லியில் ஆம்ஆத்மியை தோற்கடித்து விட்டோம். விரைவில் பஞ்சாபிலிருந்தும் அகற்றுவோம்.
காங்கிரஸ் தலைவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏதோ ஒரு அறிக்கையை விடுகிறார்கள், பின்னர் களத்தை விட்டு ஓடிவிடுகிறார்கள். பார்லியில் பேசுவதற்குக் கூட அவர்களுக்குத் துணிச்சல் இல்லை. உங்களுடன் விவாதிப்பதற்கு பாஜவின் ஒரு உள்ளூர் கிளைத் தலைவரே போதும். பிரதமர் மோடி முன்வர வேண்டிய அவசியமில்லை.
நாங்கள் மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலின் பேரில் நாங்கள் இயங்குவதில்லை, வெளிநாடுகளால் உருவாக்கப்பட்ட 'டூல்கிட்' ஆக நாங்கள் செயல்படுவதில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டின் நலன்களை விட, ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.
