திட்டங்களை நிறைவேற்ற இரவு, பகலாக உழைக்கிறோம்; பிரதமர் மோடி பேச்சு
திட்டங்களை நிறைவேற்ற இரவு, பகலாக உழைக்கிறோம்; பிரதமர் மோடி பேச்சு
ADDED : ஜூலை 04, 2026 02:26 PM

ஜெய்ப்பூர்: திட்டங்களுக்கு வெறும் அடிக்கல் நாட்டிவிட்டு பாஜ அரசு ஒதுங்கிவிடுவதில்லை; அவை முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் இரவு பகலாக உழைக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது; எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே உள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் ராஜஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிருந்தபடியே ராஜஸ்தானில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோடைக்காலத்திலும் இத்தனை இடங்களில் மக்கள் பெருமளவில் கூடியிருப்பதும், எங்கள் அனைவருக்கும் உங்கள் ஆசிகளை வழங்குவதும், பாஜ அரசின் முயற்சிகள் மீது உங்களுக்கு எவ்வளவு வலுவான நம்பிக்கை உள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.
தன்னிறைவு
உங்கள் அன்பிற்கு ராஜஸ்தான் மண்ணிடம் நான் கடமைப்பட்டுள்ளேன். எண்ணற்ற வீரர்களின் துணிச்சலுக்கு இந்த மண் சாட்சியாகத் திகழ்கிறது. சுயமரியாதையை எல்லாவற்றிற்கும் மேலாக மதிக்க வேண்டும் என்பதை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக மாறுவதை நோக்கி இந்தியா இந்த மண்ணிலிருந்து ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது.
உழைக்கிறோம்
இன்று ஒரு சுத்திகரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக ராஜஸ்தான் இளைஞர்களுக்கு நான் குறிப்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டங்களுக்கு வெறும் அடிக்கல் நாட்டிவிட்டு பாஜ அரசு ஒதுங்கிவிடுவதில்லை; அவை முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் இரவு பகலாக உழைக்கிறோம்.
உத்வேகம்
ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தின் கட்டடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இது சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கப்படும். இன்று ராஜஸ்தானில் 54,000 இளைஞர்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர்.
நெருக்கடி
ராஜஸ்தான் மண்ணிலிருந்து இன்று நமது நாட்டின் மற்றொரு வலிமையைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரினால் உலகம் முழுவதும் ஒருவிதக் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போர் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இன்று பல முக்கிய நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் திணறி வருகின்றன. 21ம் நூற்றாண்டின் புதிய இந்தியாவின் மன உறுதியும், முயற்சிகளும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை முறியடித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
