'எதிர்பார்த்தோம், ஏமாந்தோம் இனி போராட்டம் தான்': முரசு கொட்டும் அரசு ஊழியர்கள்
'எதிர்பார்த்தோம், ஏமாந்தோம் இனி போராட்டம் தான்': முரசு கொட்டும் அரசு ஊழியர்கள்
ADDED : நவ 10, 2025 06:19 AM

மதுரை: தி.மு.க., ஆட்சி நான்கரை ஆண்டுகளைத் தாண்டியும் இதுவரை தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாததால் போராட்டங்களை முன்னெடுப்பது என அரசு ஊழியர்கள் சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன.
இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது
: தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அரசு துறைகளில் 4 லட்சம் காலி பணியிடங்களுக்கு மேல் உள்ளன. இதனால் பணிப்பளுவுடன் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்கூட அறிவித்தும் தமிழகத்தில் அறிவிக்கவில்லை.
இதுபோன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 18 ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், 1.7.25 முதல் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி, டிச., 4, 5 ல் சென்னையில் உண்ணாவிரதம், 2026 ஜனவரி 18 முதல் ஜன., 30 வரை பிரசார இயக்கம், ஜன., 31ல் சென்னையில் ஆயத்த மாநாடு, அதே ஜனவரியில் சென்னையில் கோரிக்கை பேரணி, பிப்., 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து அரசு ஊழியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால் எதிர்பார்த்தது போலின்றி முற்றிலும் முரண்பாடான செயல்பாடுகளை சந்தித்து வருகிறோம்.
கடந்த ஆட்சி கோரிக்கைகளை பேசவில்லை என்றால் இப்போது அழைத்துப் பேசி இல்லை. அரசு ஊழியர் குடும்பங்களை கருத்தில் கொள்ளாமல் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதமாக குறைத்துள்ளது. அதனால் சமரசமற்ற போராட்டத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. இதற்காக நவ., 18 ல் வேலை நிறுத்தம், நவ., 24 முதல் 28 வரை பிரசாரம், டிச., 4ல் மாவட்ட தலை நகரங்களில் மறியல், 2026ல் ஜனவரி முதல் வாரம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம் என்றனர்.

