பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடணும்: சிங்கப்பூர் பிரதமர் சந்திப்புக்கு பிறகு மோடி வலியுறுத்தல்
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடணும்: சிங்கப்பூர் பிரதமர் சந்திப்புக்கு பிறகு மோடி வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2025 02:20 PM

புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது அனைத்து நாடுகளின் மனிதாபிமான கடமை என்று நாங்கள் நம்புகிறோம் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
3 நாள் அரசு முறை பயணமாக, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ளார். அவர் டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி கூறியதாவது: பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை நான் வரவேற்கிறேன்.
உறவு வளர்ச்சி
இந்தியாவிற்கு சிங்கப்பூர் பிரதமரின் வருகை மிகவும் முக்கியமானது. சிங்கப்பூர் உடனான உறவு வளர்ச்சி அடைந்து வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உடன் மிகப்பெரிய வர்த்தக உறவை சிங்கப்பூர் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது அனைத்து நாடுகளின் மனிதாபிமான கடமை என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்திய மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தை ஆதரித்ததற்காக பிரதமர் வோங் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். எங்கள் உறவுகள் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டவை. கப்பல் போக்குவரத்து,அணுசக்தி மற்றும் நகர்ப்புற நீர் மேலாண்மை போன்ற துறைகளில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.