பாக்., தூண்டிவிடும் பயங்கரவாதத்தை முழு பலத்துடன் எதிர்கொள்வோம்: ஐநாவில் இந்தியா திட்டவட்டம்
பாக்., தூண்டிவிடும் பயங்கரவாதத்தை முழு பலத்துடன் எதிர்கொள்வோம்: ஐநாவில் இந்தியா திட்டவட்டம்
UPDATED : டிச 16, 2025 09:52 AM
ADDED : டிச 16, 2025 09:51 AM

நியூயார்க்: ''பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும்'' என ஐநாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த விவாதத்தின் போதுபர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. இந்தியா 65 ஆண்டுகளுக்கு முன்பு, நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
பாகிஸ்தான் மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் இந்தியா மீது தொடுத்து, ஒப்பந்தத்தின் உணர்வை மீறியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை, இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா இறுதியாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும். பாகிஸ்தான் பாகிஸ்தான் ஒரு முன்னாள் பிரதமரை சிறையில் அடைப்பது, அரசியல் கட்சியைத் தடை செய்வது மற்றும் அதன் ஆயுதப் படைகள் 27வது திருத்தத்தின் மூலம் ஒரு அரசியலமைப்பு சதியை அரங்கேற்றி, அதன் பாதுகாப்புப் படைத் தளபதிக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்குகிறது. பாகிஸ்தான் இந்தியாவுக்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது. இவ்வாறு இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.

