தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
ADDED : நவ 18, 2025 04:59 PM

தூத்துக்குடி: தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஏற்கனவே அரசு ஊழியர்கள் எல்லாம் அரசிற்கு எதிராக தான் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அதை திசை திருப்பி மடை மாற்றி, திமுக அரசு அவர்களை மிரட்டி பணிய வைத்து இருக்கிறது. நிரந்தர பணி கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை அடித்து துரத்தி வீடு வரை சென்று மிரட்டினார்கள். இன்று அவர்களை காலையில் அழைத்து சோறு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை சரியான வகையில் இயக்கவில்லை. நான் ஏற்கனவே நிறைய பேட்டி கொடுத்து இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார். தமிழகத்தில் நாங்கள் 200 தொகுதிக்கு மேல் நிச்சயமாக வெற்றி பெறுவோம். குளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுக்களை அதிகமாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே மக்கள் தயாராகி விட்டார்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கஞ்சா, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இது ஒன்றுமே செய்யாத அரசு, விடியாத அரசுக்கு நாங்கள் முடிவு கட்டுவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
தட்டு தடுமாறும் பிரசாந்த் கிஷோர்!
முன்னதாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:எங்களது கூட்டணி குறித்து 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்பு அறிவிப்போம். பீஹாரில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார்.பிரசாந்த் கிஷோரே தட்டு தடுமாறிட்டு இருக்காரு. அவர் ஆலோசனை வழங்கி என்ன நடக்கபோகுதோ? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

