மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜ எம்பி மீது தாக்குதல்
மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜ எம்பி மீது தாக்குதல்
ADDED : அக் 06, 2025 03:38 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜ எம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு திரிணமுல் காங்கிரஸ் மீது பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அம்மாநிலத்தில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதனிடையே நாகரகட்டா பகுதியில் வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் மால்டா வடக்கு தொகுதி எம்பி ககேன் முர்மு மற்றும் எம்எல்ஏ சங்கர் கோஷ் ஆகியோர் பார்வையிட்டு நிவாரணம் வழங்கி கொண்டு இருந்தனர். அவர்களை சிலர் கடுமையாக தாக்கினர். அதில், எம்பிக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரை கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சங்கர் கோஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜவின் மேலிட பொறுப்பாளர் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசின் காட்டாட்சி நடக்கிறது. பழங்குடியினத்தை சேர்ந்த மதிப்பு மிக்க தலைவர் மற்றும் இரண்டு முறை எம்பியாக உள்ள காகென் முர்முவை திரிணமுல் தொண்டர்கள் தாக்கினர். நாகரகட்டாவில் இருந்து ஜல்பைகுரியின் தோயார் பகுதிக்கு சென்று நிவாரணம் வழங்க சென்ற போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோல்கட்டா நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி நடனமாடி கொண்டு இருக்கிறார். கட்சியினர் மற்றும் தொண்டர்கள் களத்தில் இல்லை. மீட்புப் பணியில் ஈடுபடும் பாஜ தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தாக்குகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.