பீஹாரை அடுத்து பா.ஜ., ஆட்சி அமைக்கப் போவது மேற்கு வங்கம் தான்
பீஹாரை அடுத்து பா.ஜ., ஆட்சி அமைக்கப் போவது மேற்கு வங்கம் தான்
ADDED : நவ 16, 2025 05:04 AM

பாட்னா: பீஹார் வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'கங்கை நதி, பீஹாரிலிருந்து மேற்கு வங்கத்திற்கு பாய்கிறது; அங்கு புதிய ஆட்சிக்கு வழி வகுத்து விட்டது' என, குறிப்பிட்டார். பீஹாரின் சீனியர் பா.ஜ., தலைவர்களும், 'இனி மேற்கு வங்கம் பா.ஜ., வசம்' என, பேச ஆரம்பித்து விட்டனர்.
'லாலு ஆட்சியில், பீஹார் எப்படி குண்டர்களின் ராஜ்ஜியமாக இருந்ததோ, அப்படித் தான் இன்று மம்தா பானர்ஜியின் மேற்கு வங்கம் உள்ளது; அங்கு, எந்த முன்னேற்றமும் இல்லை. பீஹாரை அடுத்து, பா.ஜ., ஆட்சி அமைக்கப்போவது, மேற்கு வங்கம் தான்' என, பீஹாரை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.
'உண்மையிலேயே, மேற்கு வங்கத்தில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதா என்றால், சந்தேகம் தான்' என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். 'பீஹார் வெற்றிக்கு காரணம், பா.ஜ., கூட்டணியின் ஆட்சி மற்றும் கட்சியின் அமைப்பு; ஆனால், மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் நிலை, பீஹார் போல அல்ல' என்கின்றனர்.
என்ன தான் ஹிந்துத்வா மற்றும் தொழில் முன்னேற்றம் என, பா.ஜ., பிரசாரம் செய்தும், 2020 சட்டசபை தேர்தலில், மம்தாவை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற முடியவில்லை. மம்தா பானர்ஜிக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது; கடந்த ஆண்டுகளில் மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் மிகவும் பலமான சக்தியாக உருவாகி உள்ளது. அவரது கட்சிக்கு 48 சதவீத ஓட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தின், 70 சதவீத வாக்காளர்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். இங்கு, திரிணமுலின் ஆதிக்கம் தான். நகரப் பகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றாலும், கிராமங்களில் இன்னு ம் மம்தா கட்சி தான் கோலோச்சுகிறது.
'பா.ஜ., ஒரு பக்கம், காங்., -இடது சாரிகள் இன்னொரு பக்கம் என, மும்முனை போட்டி வரும்போது, மம்தாவின் வெற்றிக்கு எந்த பிரச்னையும் இருக்காது' என, சொல்லப் படுகிறது. 'மேற்கு வங்கத்தில், பீஹாரைப் போலவே வெற்றிக் கனியை பறிப்போம் என, பா.ஜ., சொல்வது, அங்குள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தான்' என்கின்ற னர் சக அரசியல்வாதிகள்.

