மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் குளறுபடி!: ஒரு கோடி வாக்காளர்களை சரிபார்க்க முடிவு
மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் குளறுபடி!: ஒரு கோடி வாக்காளர்களை சரிபார்க்க முடிவு
UPDATED : டிச 14, 2025 01:02 AM
ADDED : டிச 14, 2025 01:00 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில், மகனை விட தந்தைக்கு 15 வயது குறைவாக இருப்பது உள்ளிட்ட குழப்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்தல் கமிஷன், ஒரு கோடி விண்ணப்ப படிவங்களை மீண்டும் சரிபார்க்க தயாராகி வருகிறது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அங்கு சமீபத்தில் நடந்து முடிந்தது. வரைவு வாக்காளர் பட்டியலை, நாளை மறுதினம்! வெளியிட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
திருத்தப் பணியின் போது, சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் நேற்று முன்தினம் பதிவேற்றப்பட்டது. இதில், பல விண்ணப்ப படிவங்களில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது.
வயது வித்தியாசம், உறவுமுறையில் மாற்றம் உள்ளிட்ட குழப்பங்களை சரி செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இது குறித்து, தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் உள்ள 57 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குறித்த விபரங்கள், சேகரிக்க முடியாதவையாக அல்லது கண்டறிய முடியாதவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களில், 24 லட்சத்து 14,750 பேர் தற்போது உயிருடன் இல்லை.
மேலும், 11 லட்சத்து 57,000 பேரின் விலாசம் தெரியவில்லை.
இதனால், அவர்களது விண்ணப்பப் படிவங்களை சேகரிக்க முடியவில்லை. 19 லட்சத்து 89,914 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 13 லட்சத்து 5,627 பேர் இருவேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குளறுபடிகள் ஏற்பட்ட வாக்காளர்களின் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்ளும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வட்ட அளவிலான தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் அளிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சரிபார்க்கும் பணியின்போது ஏதேனும் ஆட்சேபனைகள் எழுந்தால், அதை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


