ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
UPDATED : நவ 06, 2025 10:00 AM
ADDED : நவ 06, 2025 09:51 AM

புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டிய, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம் பெற்றதாக கூறப்படும் வாக்காளர்களில் ஒருவரான பிங்கி ஜூகிந்தர், ''நான் எந்த தவறும் செய்யவில்லை. வாக்கு திருட்டு ஆதாரமற்றது'' என குற்றம் சாட்டி உள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல், ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பினார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், '' ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. அதில், 5.21 லட்சம் பேர் போலி வாக்காளர்கள், 93,174 பேர் தகுதியற்ற வாக்காளர்கள், 19.26 லட்சம் பேர் ஒரே பெயரில் பல இடங்களில் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஹரியானாவில், எட்டு வாக்காளர் களில் ஒருவர் போலியானவர்.
ஹரியானாவில் உள்ள ராய் ஓட்டுச்சாவடியில், ஒரு போலி வாக்காளர், 22 முறை ஓட்டளித்துள்ளார். இத்தனைக்கும் அவர் இந்தியர் கூட அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் மேத்யூஸ் பெரேரோவின் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது'' என கூறியிருந்தார்.
தற்போது பிரேசில் மாடல் அழகி பெயரில் ஓட்டு போடப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
இந்நிலையில், ராகுல் குற்றம் சாட்டிய, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம் பெற்றதாக கூறப்படும் வாக்காளர்களில் ஒருவரான பிங்கி ஜூகிந்தர் அளித்த பேட்டி: நான் எந்த தவறும் செய்யவில்லை. வாக்கு திருட்டு ஆதாரமற்றது. தனது வாக்காளர் அடையாள அட்டையில் அச்சுப்பிழை இருக்கிறது. தனது வாக்காளர் அட்டையில் நீண்ட காலமாக புகைப்படம் தவறாக அச்சிடப்பட்டு உள்ளது.
நான் எனது வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தபோது, அது முதலில் ஒரு புகைப்படத் தவறாக அச்சிடப்பட்ட நிலையில் வந்தது. அதில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் படம் இருந்தது. நாங்கள் அதை உடனடியாகத் திருப்பி அனுப்பினோம். ஆனால் இன்னும் எங்களுக்கு சரியான நகல் கிடைக்கவில்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் எனது வாக்காளர் சீட்டு மற்றும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டளித்தேன். பிழை தேர்தல் கமிஷன் பக்கம் தான் இருக்கிறது. அது எப்படி என் தவறு? முதலில் தவறு நடந்தபோது, நாங்கள் ஏற்கனவே திருத்தம் கோரியிருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதே மாடலின் புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு பெண் முனிஷ் தேவியின் மைத்துனர் கூறியதாவது: முனிஷ் மற்றும் தங்கள் குடும்பத்தினர் இப்போது சோனிபட்டில் வசித்து வந்தாலும், மச்ரோலி கிராமத்தில் உள்ள மூதாதையர் வீட்டிலிருந்து ஓட்டளித்து வருகிறார்கள்.
இன்று தேர்தல் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது; அவர்கள் முனீஷின் வாக்காளர் அட்டையை அனுப்பச் சொன்னார்கள், நான் அதை அனுப்பிவிட்டேன். நான் என் அம்மாவையும் மைத்துனியையும் ஒன்றாக வாக்களிக்க அழைத்து வந்தேன். 2024ல் அவர் ஓட்டளித்தார். இது ஓட்டு திருட்டு கிடையாது.
நாங்கள் எங்கள் சொந்த வாக்குகளை அளிக்க வந்தோம் என்பது முகவர்களுக்கும் தெரியும். இந்த பிரச்னை முன்பு ஒரு முறை நடந்தது, முனிஷின் புகைப்படம் தவறாக மாற்றப்பட்டது, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் படம் இருந்தது. ஆனால் நாங்கள் அவரது வாக்காளர் அட்டையைக் காட்டியபோது, அவர்கள் அவளை ஓட்டளிக்க அனுமதித்தனர். பிழை தரவு ஆபரேட்டர்களிடமிருந்து வந்தது, எங்களிடமிருந்து அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

