நேரு குறித்த ஆவணங்களில் உள்ள ரகசியம் என்ன?: சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி
நேரு குறித்த ஆவணங்களில் உள்ள ரகசியம் என்ன?: சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி
UPDATED : டிச 18, 2025 10:56 PM
ADDED : டிச 18, 2025 08:49 PM

புதுடில்லி: '' முன்னாள் பிரதமர் நேரு குறித்த 51 ஆவணங்களில் என்ன ரகசியமாக வைக்கப்படுகிறது,'' என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நேருவின் 51 ஆவணங்கள் குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி பார்லிமென்டில் பாஜ எம்பி சம்பித் பாத்ரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், ' முன்னாள் பிரதமர் நேரு குறித்த எந்த ஆவணமும் மாயமாகவில்லை,' என விளக்கமளிக்கப்பட்டது.
இதனையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில்,' உண்மை வெளிப்பட்டு விட்டது. மன்னிப்பு கேட்பது எப்போது', என கேள்வி எழுப்பினார்.
விளக்கம்
இதனையடுத்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை; எல்லாமே 2008ம் ஆண்டு முதல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவிடம் இருப்பதாக' தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேரு குறித்த ஆவணங்கள், பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போகவில்லை. இருப்பிடம் தெரியவில்லை என்றால் தான் காணாமல் போனது என அர்த்தம்.
ஆனால், உண்மையில் 2008 ம் ஆண்டு பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இருந்து நேருவின் 51 ஆவணங்களை அவரது குடும்பத்தினர் திரும்ப பெற்றுக் கொண்டனர். அந்த ஆவணங்கள் இருக்கும் இடம் தெரியும். எனவே அவை காணாமல் போகவில்லை.
பிரதமர் நினைவு அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்படும் பதிவுகளின்படி, நேரு குறித்து ஆவணங்களை கடந்த 2008 ம் ஆண்டே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
2025 ஜனவரி மற்றும் ஜூலை மாதம் உட்பட சமீபத்திய நாட்களில் பிரதமர் நினைவு அருங்காட்சியகத்தில் இருந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட பிறகும், இந்த ஆவணங்களை ஏன் திருப்பித் தரப்படவில்லை என்பதற்கு சோனியா விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு.
அந்த ஆவணங்களில் என்ன மறைக்கப்படுகிறது? என்ன ரகசியமாக வைக்கப்படுகிறது? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு சோனியா விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆவணங்களை திருப்பித் தராததற்கு சோனியா கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல. முக்கியமான இந்த வரலாற்று ஆவணங்கள் ஏன் இன்னும் பொது ஆவண காப்பகத்துக்கு வெளியே இருக்கிறது என்பது தான் இங்குள்ள கேள்வி
அவை தனி நபர் குடும்பத்தின் ஆவணங்கள் அல்ல. நாட்டின் முதல் பிரதமருடன் தொடர்புடையது. பல தேசிய வரலாற்று ஆவணங்களின் ஒரு அங்கம். அத்தகைய ஆவணங்கள் பொது மக்கள் முன்பு இருக்க வேண்டும். பூட்டிய அறைகளுக்குள் இல்லை.
ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை மற்றும் காலத்தை பற்றி ஒரு உண்மையான மற்றும் சமநிலையான புரிதலை எட்டுவதற்காக உண்மையான ஆவணங்களை அணுகுவதற்கு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், மற்றும் நாட்டின் குடி மக்களுக்கு முழு உரிமை உண்டு.
கடமை
ஒரு புறம் அந்த காலகட்டத்தின் தவறுகளை பற்றி விவாதிக்க வேண்டாம் என்று எங்களிடம் கேட்கப்படுகிறது. மறுபுறம், தகவலறிந்த விவாதத்துக்கு வழிவகுக்கக்கூடிய மூல ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு கிடைக்காமல் தடுக்கப்படுகின்றன. இந்த முரண்பாட்டைப் புறக்கணிக்க முடியாது. இது ஒரு சாதாரண விஷயமல்ல. வரலாற்றைத் தேர்வு செய்து தொகுக்க முடியாது. வெளிப்படைத்தன்மையே ஜனநாயகத்தின் அடித்தளம். ஆவணக் காப்பகங்களை வெளிப்படையாக வைத்து இருப்பது அதன் தார்மீகக் கடமையாகும். சோனியாவும் அவரது குடும்பமும் இந்த கடமையை நிலைநிறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கஜேந்திர ஷெகாவத் கூறியுள்ளார்.

