ஆந்திர கோவில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காரணம்: அர்ச்சகர் வெளிப்படை
ஆந்திர கோவில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காரணம்: அர்ச்சகர் வெளிப்படை
UPDATED : நவ 02, 2025 06:26 PM
ADDED : நவ 02, 2025 06:17 PM

ஸ்ரீகாகுளம்:  ஆந்திராவில் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியான நிலையில், அதிகளவு பக்தர்கள் வந்தால் நான் என்ன செய்ய முடியம். அவர்கள் முண்டியடித்து சென்றால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என கோவிலை கட்டியவரும், அர்ச்சகருமான ஹரிமுகுந்த பாண்டா கூறியுள்ளார்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஹரிமுகுந்த பாண்டா, 80, என்பவர், நான்கு மாதங்களுக்கு முன் இந்த கோவிலை கட்டினார். இந்த இடம், 'சின்ன திருப்பதி' என அழைக்கப்பட்டது. ஏகாதசி திருநாளான நேற்று( நவ.,01), வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகம் காணப்பட்டனர். வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
என்ன செய்வது
இந்நிலையில் ஹரிமுகந்த பாண்டா கூறியதாவது: ஒரே  நேரத்தில் ஏராளமானோர் வந்தால் நான் என்ன செய்வது. கோவிலுக்கு வருபவர்களை நான் வரிசையாக அனுப்புவதுதான் வாடிக்கை. ஆனால், நேற்று அதிகம் பேர் வந்துவிட்டனர். என்ன நடந்தது எனத் தெரியவில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனக்குதைரியம் உள்ளது. வரிசையில் செல்லுங்கள் என அனைவரிடமும் கூறினேன். தரிசனத்துக்கு வருபவர்கள் முண்டியடித்து சென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும். போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் வரையில் நான் மதிய உணவுக்கு கூட செல்லாமல் மதியம் 3 மணி வரை காத்திருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீகாகுளம் எஸ்பி  மகேஸ்வர ரெட்டி கூறுகையில், முகுந்தா பான்டா நிர்வகிக்கும் இக்கோவில், அறநிலையத்துறையில் பதிவு செய்யப்படவில்லை.  நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னர் போலீசிடம் அனுமதி பெறவில்லை.  விண்ணப்பிக்கவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

