sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் அடுத்து நடக்க போவது என்ன?

/

வங்கதேசத்தில் அடுத்து நடக்க போவது என்ன?

வங்கதேசத்தில் அடுத்து நடக்க போவது என்ன?

வங்கதேசத்தில் அடுத்து நடக்க போவது என்ன?

1


ADDED : நவ 19, 2025 06:55 AM

Google News

1

ADDED : நவ 19, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது சிறப்பு நிருபர் -

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டின் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்திருப்பது, ஒரு அதிர்ச்சியான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. தீர்ப்பைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே, பலரின் புருவங்களை உயர்த்தும் கேள்விக்குறியாக உள்ளது.

மாணவர் போராட்டம்

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா, கடந்தாண்டு அந்நாட்டில் நடந்த மாணவர் போராட்டத்தின் வாயிலாக தன் பதவியை இழந்தார். இதையடுத்து, அங்கு நிலைமை மோசமானதை தொடர்ந்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அந்நாட்டில் பொறுப்பேற்றுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், அந்நாட்டில் நடந்த மாணவர் போராட்டம் குறித்து விசாரிக்க இடைக்கால அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.இப்போராட்டத்தில் பங் கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொலையானதற்கு ஷேக் ஹசீனாவின் அடக்குமுறையே காரணம் என கூறி, அந்நாட்டு தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மாணவர் போராட்டத்தின் போது உயிரிழந்தோருக்கு, நீதி கேட்டு போராடி வரும் குறிப்பிட்ட அணியினர் இத்தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இத்தீர்ப்பை எதிர்த்து ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் பெரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதையடுத்து, வன்முறையாளர்களை கண்டதும் சுட இடைக்கால அரசு உத்தரவிட்டு உள்ளது.

உள்நோக்கம்

இந்நிலையில், அவாமி லீக் கட்சியினர் இந்த தீர்ப்பாயத்தை கட்டை பஞ்சாயத்து எனவும், தீர்ப்பு கடுமையான உள்நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்து உள்ளனர். அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில், அவாமி லீக் கட்சி போட்டியிட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வந்துள்ள இத்தீர்ப்பு போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கியிருந்தாலும், இந்த உத்தரவு உடனடியாக அமலாகாது என கூறப்படுகிறது. இந்த உத்தரவை எதிர்த்து, ஹசீனா அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டாலும், விதிக்கப்பட்ட மரண தண்டனையை வங்கதேச அதிபருக்கு ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ அதிகாரம் உள்ளது. இதற்கிடையே, வங்கதேச இடைக்கால அரசு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2013ல் இந்தியா -வங்கதேசம் இடையே நாடு கடத்தல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது


இருந்தாலும், இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட பிரிவின் அடிப்படையில், குற்றச்சாட்டு அரசியல் தன்மை கொண்டது என்று இந்தியா கருதினால் நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரிக்கலாம். தற்போது ஹசீனா விஷயத்தில் இந்தியா இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

வங்கதேசத்தின் குற்றவியல் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளன:குற்றவியல் தீர்ப்பாயம் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாக, மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் கீழ், அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் மற்றும் முன்னாள் காவல்துறை தலைவர் சவுத்ரி அப்துல்லா அல் - மாமுன் ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

ஐ.சி.டி., விசாரணைகள், பதில்களை கொடுப்பதற்கு பதிலாக பல கேள்விகளை எழுப்புகின்றன. இதில் முதலாவது மற்றும் முதன்மையானது என்னவென்றால், இந்த வழக்கை கையாளும் ஐ.சி.டி.,யின் சட்டப்பூர்வமான தன்மையாகும். இரண்டாவது, சட்ட நடைமுறைகளை பின்பற்றாதது போல் தோன்றும் அதன் செயல்முறைகள்.

விசாரணை

வங்கதேசத்தில் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ள ஐ.சி.டி. என்ற தீர்ப்பாயம், 1971ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தின் போது, பாகிஸ்தான் அமைப்புகளும், அதன் கூட்டாளிகளும் செய்த போர்க்குற்றங்களை விசாரிக்கவும், வழக்கு தொடரவும், 1973ல் அப்போதைய அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் அரசால் நிறுவப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பின், அது செயலிழந்தது. இதையடுத்து, அதன்பின் நடப்பு நுாற்றாண்டின் முதல் பத்தாண்டில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த காலகட்டத்தில், மீண்டும் தீர்ப்பாயத்தை உயிர்ப்பித்தார்.

இந்த ஐ.சி.டி.,யும் வங்கதேச பார்லிமென்டால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச குற்றங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இதனால், ஐ.சி.டி., அதிகாரம் குறித்த கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், கடந்த 1971ல் நிகழ்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகளுக்காக மட்டுமே வரை யறுக்கப்பட்டது, அதற்கு அப்பாற்பட்டவைக்காக அல்ல. இரண்டாவதாக, வழக்கம் போல் ஐ.சி.டி., என்பது போர்கள், உள்நாட்டு போர்கள் உட்பட போர் குற்றங்கள் தொடர்பான சட்ட பிரச்னைகளை பார்க்கும் ஒரு நீதித்துறையாகும்.

தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகள், பதில்களை கொடுப்பதற்கு பதிலாக பல கேள்விகளை எழுப்புகின்றன.


ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் அரங்கேறிய நிகழ்வுகள், இந்த வரம்புக்கு அப்பாற்பட்டவை. மேலும், இவை அந்நாட்டின் குற்றவியல் சட்டங்களின் கீழ் கையாளப்பட வேண்டியவை. ஷேக் ஹசீனா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இருவரின் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே இந்த விசாரணை நடந்துள்ளது. மேலும், விசாரணையின் போது அவர்களுக்கு போதுமான சட்ட பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இதனால், சட்டத்தின் சமமான பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் கீழ் சமமான செயல்முறை குறித்து கேள்விகள் எழுகின்றன. அதனால் இந்த தீர்ப்பு முதலில் அந்த நாட்டைக் கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. அதன்பிறகே, அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.






      Dinamalar
      Follow us