குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றால் சம்பளப்பணம் எங்கிருந்து வரும்; தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றால் சம்பளப்பணம் எங்கிருந்து வரும்; தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி
UPDATED : நவ 09, 2025 04:38 PM
ADDED : நவ 09, 2025 04:37 PM

பாட்னா: ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் சம்பளம் கொடுக்க பணம் எங்கே இருந்து வரும், கணிதம் தெரியுமா? என தேஜஸ்வி யாதவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
பீஹாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காது. காங்கிரசும், ஆர்ஜேடியும் ஜாதி, மதம் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கின்றன.
இந்தத் தேர்தல் நல்லாட்சிக்கும், காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கும் இடையிலான போராட்டம். பீஹாரை ஜாதி மோதல்கள் மற்றும் படுகொலைகளின் சகாப்தத்தில் தள்ளிய ஆர்ஜேடி ஓட்டுகளுக்காக மக்களை தேடுகிறது.
இதுபோன்ற சக்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக இண்டி கூட்டணி பொய் சொல்கிறது.
அத்தனை பேருக்கும் சம்பளம் கொடுக்க பணம் எங்கிருந்து வரும்? தேஜஸ்விக்கு கணிதம் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவை வெறும் பொய்கள். பீஹாரை மேலும் மேம்படுத்துவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே சிந்திக்க முடியும்.
'காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கு' அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2047ம் ஆண்டுக்குள் அதை பணக்கார நாடாக மாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. பீஹாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

