யார் அந்த 14 எம்.பி.,க்கள்; சி.பி.ஆர்., பெற்ற கூடுதல் ஓட்டுகளால் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!
யார் அந்த 14 எம்.பி.,க்கள்; சி.பி.ஆர்., பெற்ற கூடுதல் ஓட்டுகளால் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!
ADDED : செப் 10, 2025 12:16 PM

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தே.ஜ.கூ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், 452 ஓட்டுகள் பெற்று வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட இண்டி கூட்டணியின் சுதர்சன் ரெட்டி 300 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 15 பேர் செல்லாத வகையில் ஓட்டளித்துள்ளனர்.
மொத்தமுள்ள 781 வாக்காளர்களில், 14 பேர் ஓட்டளிக்கவில்லை. அவர்களில் 7 பேர் பிஜூ ஜனதாதளம் கட்சியினர். 4 பேர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சியினர். ஒருவர் அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர்; மற்ற இருவர் பஞ்சாபை சேர்ந்த சுயேச்சைகள்.
மீதமுள்ள 767 பேர் ஓட்டளித்தனர். இதில், 452 ஓட்டுகளை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த பலம் 427 ஓட்டுகள் மட்டுமே. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேரையும் சேர்த்தாலும், மொத்த பலம் 438 மட்டுமே.
அப்படியெனில், மீதமுள்ள 14 பேர் யார் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கவர்னராக இருந்தவர். அந்த வகையில், அந்த மாநில எம்பிக்களுடன் அவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. அவர்கள் ஓட்டளித்திருக்கலாம் என்றும், பாஜ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், தங்கள் கட்சியினர் யாரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளிக்கவில்லை என்று உத்தரவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினரும் மறுத்துள்ளனர்.
அதேபோல, ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் மாற்றி ஓட்டளித்ததாக வெளியான தகவலை அந்த கட்சியும் மறுத்துள்ளது. இதனால், மாற்றி ஓட்டளித்த எம்.பிக்கள் யாராக இருக்கும் என்பது பற்றி, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.