கோவில், மடங்கள் சொத்துக்கள் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தயக்கம் ஏன்? அறநிலையத்துறைக்கு 'ஐகோர்ட்' கேள்வி
கோவில், மடங்கள் சொத்துக்கள் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தயக்கம் ஏன்? அறநிலையத்துறைக்கு 'ஐகோர்ட்' கேள்வி
ADDED : அக் 30, 2025 04:35 AM

சென்னை: 'கோவில்கள், மடங்கள் மடங்களின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதில், அறநிலையத்துறை தயக்கம் காட்டுவது ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவில்கள், மடங்கள், ஹிந்து மத கட்டளைகளின் நிதி மற்றும் சொத்துக்கள் குறித்த அரசாணைகள், டெண்டர் அறிவிப்புகள், அனுமதிக்கான உத்தரவு போன்றவற்றை, உடனுக்குடன் பொது வெளியில், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய உத்தரவிட கோரி, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''டெண்டர் விபரங்கள் அந்தந்த கோவில் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
''கோவில் சொத்து ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. அவற்றை கொண்டு 'சைபர்' மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது:
தகவல் அறியும் சட்ட பிரிவு 4ன் கீழ், பொது அதிகாரிகள் தாமாக முன்வந்து சில தகவல்களை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
டெண்டர்கள், தணிக்கை ஆட்சேபனைகள், நில பதிவேடுகள், நிதி தொடர்பான அறிவிப்புகள், சட்டத்தின்படி பொது ஆவணங்கள் என்பதால், அவற்றை பதிவேற்றுவதில் என்ன தயக்கம்.
சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது, ஆவணங்களை பதிவேற்ற முடியாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
அறநிலையத்துறை சட்டப் பிரிவு 29ன்படி, சொத்து விபரங்கள், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து கோவில்கள் விபரங்களும் பதிவேற்ற வேண்டும்.
இப்பணிகளை செய்ய போதுமான நிதி, உள்கட்டமைப்பு, அறநிலையத்துறையிடம் இல்லையா? இவ்வாறு நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.
இதையடுத்து, எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; பதிவேற்றம் செய்யாத தகவல்கள் என்ன என்பது குறித்து விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ., 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

