ADDED : ஏப் 26, 2026 02:01 AM

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபையின் பதவிக்காலம், அடுத்தாண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, இங்கு தேர்தல் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும், கட்சி தலைமைக்கும் பலவித பிரச்னைகள் இருந்தாலும், 'அடுத்த சட்டசபை தேர்தலிலும், யோகி தான் முதல்வர் வேட்பாளர்' என்று, தேசிய கட்சி தலைவர் நிதின் நபின் அறிவித்து விட்டார்.
ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ்., களத்தில் இறங்கி, தேர்தல் வேலைகளை துவங்கி விட்டது. இந்த தேர்தலை, ஜனாதிபதி தேர்தலுடன் இணைத்து பேச ஆரம்பித்து விட்டனர், பா.ஜ.,வினர்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவிக்காலம், 2027 ஜூலையில் முடிவடைகிறது. உ.பி., முதல்வராக மட்டுமன்றி, அங்கு அமைச்சராகவும் பணியாற்றியவர், ராஜ்நாத் சிங். இப்போது, மத்திய அரசின் ராணுவ அமைச்சராக உள்ளார்.
'இவர் தான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்' என்று, பா.ஜ.,விற்குள் பேச்சு அடிபடுகிறது. வடமாநிலங்களைப் பொறுத்தவரை, தேர்தல் என்றாலே அது ஜாதி அடிப்படையில் தான். ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவர் ராஜ்நாத் சிங். ராஜ்புத்திற்கு, உ.பி.,யில் பெரும் வாக்கு வங்கி உள்ளது.
'இவர் ஜனாதிபதியாகிறார் என்றால், இந்த வாக்கு வங்கியுடன், உ.பி.,யின் பெருவாரியான மக்களும், சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விற்கு வாக்களிப்பர்' என்று கட்சி நம்புகிறது. இதுவரை, ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உ.பி., முதல்வராக இருந்துள்ளனர். உ.பி.,யிலிருந்து ஒருவர் ஜனாதிபதியானால், அது மாநிலத்திற்கு பெருமை என, வாக்காளர்கள் பா.ஜ., பக்கம் இருப்பர் என்பது கட்சி மேலிடத்தின் கருத்து.
ஆனால், 'உ.பி., தேர்தல் முடிந்த பின், ராஜ்நாத்திற்கு பதில், வேறு யாராவது ஒருவரை ஜனாதிபதியாக்கவும் வாய்ப்பு உண்டு. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அதிரடி முடிவை எடுப்பவர்கள்.
ராஜ்நாத் சிங் என கிளப்பிவிட்டு, பின் அவரை கழற்றிவிடவும் மோடியும், அமித் ஷாவும் தயங்க மாட்டர்! பலரும் அறியாத ஒருவர் கூட, ஜனாதிபதியாகலாம்' என்றும், ஒரு சாரார் கட்சிக்குள் பேசுகின்றனர்.
