சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு அரசு புதிய கட்டணம் நிர்ணயம்; மாநகராட்சிகள் தீர்மானம் ரத்தாகுமா?
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு அரசு புதிய கட்டணம் நிர்ணயம்; மாநகராட்சிகள் தீர்மானம் ரத்தாகுமா?
ADDED : டிச 31, 2025 03:59 AM

சென்னை: சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு, அரசு கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில், 20,000 ரூபாய் வசூலிக்கும் மாநகராட்சிகளின் தீர்மானம் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், 2022 ஏப்ரல் 1ல் சொத்து வரி, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தையும், உள்ளாட்சி அமைப்புகள் ஓசையின்றி உயர்த்தின.
நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற, 500 முதல் 1,500 ரூபாய் வரை என்ற, நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2023ல் சென்னை தவிர்த்து, பிற மாநகராட்சிகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, சொத்தின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் வரை என்றால், 1,000 ரூபாய்; 10 லட்சம் ரூபாய் வரை என்றால், 3,000 ரூபாய்; 20 லட்சம் ரூபாய் வரை என்றால், 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், சொத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் வரை என்றால், 10,000 ரூபாய்; ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து, மாநகராட்சிகள், நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வந்தன. இந்நிலையில், வீடுகளுக்கான சொத்து வரி பெயர் மாற்ற, 500 ரூபாய் என, தமிழக அரசு புதிய கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை, மன்ற கூட்டத்தில் விவாதித்து அமல்படுத்த, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:
சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு, ஏற்கனவே ஒரே சீரான கட்டணம் தான் இருந்தது. கடந்த, 2023ல் மன்ற கூட்ட தீர்மானம் என்ற அடிப்படையில், மாநகராட்சிகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க துவங்கின.
இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் ஒரே சீரான கட்டணத்தை அறிவித்துள்ளது. இதனால், மாநகராட்சிகள், நகராட்சிகள் ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்வதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

