ராணுவத்தில் இடஒதுக்கீடு கோருவதா? ராகுலுக்கு ராஜ்நாத் சிங் பதிலடி
ராணுவத்தில் இடஒதுக்கீடு கோருவதா? ராகுலுக்கு ராஜ்நாத் சிங் பதிலடி
ADDED : நவ 06, 2025 03:55 AM

பாட்னா: ''ஆயுதப் படைகளில் இட ஒதுக்கீடு கோருவதன் மூலம், நாட்டில் அராஜகத்தை கட்டவிழத்துவிட ராகுல் முயற்சிக்கிறார்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலையொட்டி, அவுரங்காபாதில் சமீபத்தில் நடந்த பிரசாரத்தில் பேசிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், 'நாட்டின் மொத்த மக்கள் தொகையில் உயர் ஜாதியினர், 10 சதவீதம் பேர் மட்டுமே ராணுவம், நீதித்துறை போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 90 சதவீத தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை' என, குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள, பீஹாரின் ஜமுய் மாவட்டத்தில் நேற்று நடந்த தே.ஜ., கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ராகுலுக்கு என்ன ஆயிற்று? ஆயுதப் படை களில் இட ஒதுக்கீடு பற்றி ஏன் அவர் கேள்வி எழுப்புகிறார்? இதன் மூலம் நாட்டில் அராஜகத்தை உருவாக்க அவர் முயற்சிக்கிறார்.
ரா ணுவத்துக்கு ஒரேயொரு மதம் தான் உள்ளது. அது, ராணுவ மதம். ஆயுதப் படைகளை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். நாட் டை வழிநடத்துவது என்பது, குழந்தைகளுக்கான விளை யாட்டு அல்ல என்பதை ராகுல் அறிய வேண்டும்.
தேர்தல் கமிஷன் போன்ற அரசியலமைப்பு அமைப்புகள் மீது, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி குற்றஞ்சாட்டுகிறார். காங்., தோல்வி அடையும் என்பது அவருக்கு தெரியும். அதை ஏற்க முடியாமல் தான், இது போல அவர் பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

