ஆக்கப்பூர்வமாக நிறைவடைந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 8 மசோதாக்கள் நிறைவேற்றம்
ஆக்கப்பூர்வமாக நிறைவடைந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 8 மசோதாக்கள் நிறைவேற்றம்
ADDED : டிச 21, 2025 01:05 AM

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், வரலாற்றிலேயே முதல் முறையாக குறைந்த நாட்களில் நடந்து முடிந்துள்ளது. கடந்த 1ம் தேதி துவங்கிய கூட்டத்தொடர், 19ம் தேதி முடிந்தது.
வார விடுமுறையை கழித்தால் வெறும் 15 நாட்கள் மட்டுமே இந்த கூட்டத்தொடர் நடந்துள்ளது. அதே சமயம் ஆக்கப்பூர்வமான வகையில் மொத்தம் எட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
1 வளர்ந்த பாரதம் - ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி திட்ட மசோதா -2025
மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. புதிய மசோதாவில், வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் 40 சதவீத அளவுக்கு நிதி ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது.
2 இந்தியாவுக்கான நீடித்த மற்றும் மேம் படுத்தப்பட்ட அணுசக்தி மசோதாவான - சாந்தி 2025
அணுசக்தி துறையில், 100 சதவீத அளவுக்கு தனியாரை அனுமதிக்கும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவிலும் இம் மசோதா நிறைவேற்றப்பட்டதால் விரைவில் சட்டமாகவுள்ளது.
3 அனைவருக்குமான காப்பீடு; அனைவருக்குமான பாதுகாப்பு திருத்த காப்பீடு மசோதா - 2025
இம்மசோதா, காப்பீடு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கிறது.
4 சட்ட திருத்தம் மற்றும் ரத்து மசோதா - 2025
காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வதற்கும், நான்கு சட்டங்களை திருத்துவதற்கும் இம்மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
5 மணிப்பூர் சரக்கு மற்றும் சேவைகள் வரி இரண்டாவது திருத்த மசோதா - 2025
மணிப்பூர் மாநில அரசு ஜி.எஸ்.டி., வரி விதிக்க இம்மசோதா வகை செய்கிறது.
6 மத்திய கலால் திருத்த மசோதா - 2025
கடந்த 1944ல் கொண்டு வரப்பட்ட மத்திய கலால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இம்மசோதா அனுமதிக்கிறது.
7 சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா
பான் மசாலா மற்றும் மத்திய அரசு அறிவிக்கும் பொருள்கள் மீது வரி விதிக்க வகை செய்கிறது. இந்த வரி மூலம் கிடைக்கும் நிதி பொது சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு செலவிடப்படும்.
8 பங்கு சந்தை விதிகள் மசோதா - 2025
முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, நிதி சந்தையில் தேவையற்ற விதிமுறைகளை குறைத்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க கொண்டு வரப்பட்டது.
வளர்ந்த பாரதம் கல்வி நிறுவன மசோதா - 2025
பல்கலை மானிய குழு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆகிய கல்வி நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஒரே அமைப்பாக செயல்படுத்த இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

