கடந்தாண்டு கூட்ட நெரிசலில் பெண் பலி: 11வது குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜுன் சேர்ப்பு
கடந்தாண்டு கூட்ட நெரிசலில் பெண் பலி: 11வது குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜுன் சேர்ப்பு
ADDED : டிச 28, 2025 04:32 AM

ஹைதராபாத்: 'புஷ்பா 2' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது ஹைதராபாத் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 - தி ரூல் திரைப்படம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் கடந்தாண்டு டிச., 5ல் வெளியானது.
முன்னதாக, இந்த படத்தின் சிறப்பு காட்சி, தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச., 4ல் திரையிடப்பட்டது.
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் ரசிகர்களுடன் சேர்ந்து இந்த காட்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு காட்சியின் போது, அல்லு அர்ஜுன் மற்றும் படத்தின் நாயகி ராஷ்மிகா வந்ததை அடுத்து, அவர்களை காண ரசிகர்கள் முண்டி அடித்து சென்றனர். இந்த கூட்ட நெரிசலில், சிக்கி ரேவதி, 35, என்பவர் பலியானார். அவரின் மகனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஹைதராபாத் போலீசார், நடிகர் அல்லு அர்ஜுனை, டிச., 13ல் கைது செய்தனர். மறுநாளே அவர் ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நம்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், பெண் பலியான விவகாரத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், அல்லு அர்ஜுன், பவுன்சர்கள் எனப்படும் பாதுகாவலர்கள் உட்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சந்தியா திரையரங்க உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், அல்லு அர்ஜுன் 11வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், 'புஷ்பா 2' தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி நபர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என, 100 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

