மகளிர் இடஒதுக்கீடை அமல்படுத்தும் மசோதா: சிறப்பு பார்லிமென்ட் கூட்டம் கூட்ட திட்டம்
மகளிர் இடஒதுக்கீடை அமல்படுத்தும் மசோதா: சிறப்பு பார்லிமென்ட் கூட்டம் கூட்ட திட்டம்
ADDED : நவ 12, 2026 10:28 PM

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2023ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது.
தொகுதி மறுவரையறை
ஏப்ரல் 17ல் நடந்த பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுவரையறை உடன் மகளிர் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.இந்த மசோதா லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543-லிருந்து அதிகபட்சம் 850 ஆக உயர்த்தி, தொகுதி மறுவரையறை வழியாக மகளிர் இடஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலுக்கு முன் அமல்படுத்தும் அம்சம் இருந்தது.
ஆனால் தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களுக்க அதிக தொகுதி கிடைப்பதுடன், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அரசியல் சாசன திருத்த மசோதா என்பதால், அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அது கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது. மீண்டும் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
அதில், தென் மாநிலங்களின் எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி விகிதாசாரத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.
வெற்றி பெறும்
இதற்காக பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தொடருக்கான தேதி, எத்தனை நாட்கள் சபையை கூட்டுவது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த முறை மசோதா 15 முதல் 18 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பா.ஜ., எம்.பி.,க்கள் உள்ளனர்.
