ADDED : அக் 02, 2025 06:22 AM

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 9, 10ம் தேதிகளில், தமிழக அரசின் 'டி.என்., ஸ்டார்ட் அப்' சார்பில், 'உலக புத்தொழில் மாநாடு-2025' நடக்கிறது.
உலகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவன நிபுணர்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 50க்கும் மேற்பட்ட தமிழக பிராண்டுகள், 150க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 750க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், 75க்கும் மேற்பட்ட தொழில்வளர் மையங்கள், 10க்கும் மேற்பட்ட யூனிகார்ன், சூனிகார்ன் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஏராளமான வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என, தொழில் அமைப்புகளுக்கு, அரசு சார்பில் வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகின்றன.
'மாஸ்டர் கிளாஸ்' ஏற்கனவே உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களை விரிவுபடுத்திக் கொள்ளவும், புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க விருப்பமுள்ளவர்கள், புரோட்டோடைப் மாதிரிகளை வைத்துள்ளவர்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், 'மாஸ்டர் கிளாஸ்' நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், புதிய ஸ்டார்ட் அப் ஐடியாக்களை தொழிலாக மாற்றுவது, தேசிய, சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து விரிவுபடுத்துவது, சந்தை வாய்ப்பை அதிகரிப்பது, முதலீடுகளை ஈர்ப்பது என அனைத்துக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. இரு நாட்களில், 11 அமர்வுகள் 'மாஸ்டர் கிளாஸ்' நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டுள்ளன.
வெஞ்சர் கிரியேஷன் மெஷின், ஏ.ஐ. தொழில்நுட்பத்துடனான நிர்வாகம், வாட்ஸ்அப்பை தொழில்வளர்ச்சிக்கு பயன்படுத்துதல், ஐடியாவில் இருந்து தொழிலாக மாற்றுதல், கூகுள் கருவிகளைப் பயன்படுத்துதல், ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி, தரவுகளைப் பயன்படுத்துதல் என, 11 விதமான தலைப்புகளில் உரையும், விவாதமும் நடக்கிறது.
முன்னணி நிறுவனங்கள் கூகுள், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, வெஞ்சர் ஸ்டூடியோ போரம், மாநில அரசின் திட்டக்குழு, நாட்வித்தவுட்ரிஸ்க், கூகுள் பார் ஸ்டார்ட் அப்ஸ், போன் பே, கம்மா, ஹார்வர்டு பல்கலை., ஜோஹோ, டிசைன் திங்கிங் என சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து பங்கேற்று உரை நிகழ்த்தி, வழிகாட்டுகின்றனர்.
எப்படி பங்கேற்பது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த அமர்வுகளில் பங்கேற்க முடியும். அனுமதி (பாஸ்) கட்டாயம். முன்பதிவு செய்ய வேண்டும். இரு நாட்களுக்கான உணவு, தொழில் சார்ந்த 'கிட்' வழங்க ப்படும்.
இதுதொடர்பான தகவல்கள், 'டிஎன்ஜிஎஸ்எஸ்' செயலியிலும், tngss.startuptn.in மாநாட்டு இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளன. அதில் பார்த்து, பதிவு செய்து கொள்ளலாம்.
பங்கேற்க விரும்பும் தொழில்முனைவோர் அதிகமாக இருப்பின், துறை சார்ந்த முன்னுரிமை அடிப்படையில், இடம் ஒதுக்கப்படும்.