அரசு மருத்துவமனை மருந்தில் புழுக்கள்: மத்திய பிரதேசத்தில் மற்றொரு அவலம்
அரசு மருத்துவமனை மருந்தில் புழுக்கள்: மத்திய பிரதேசத்தில் மற்றொரு அவலம்
ADDED : அக் 17, 2025 12:29 AM

குவாலியர்: மத்திய பிரதேசத்தில், இருமல் மருந்து குடித்து, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரம் மறைவதற்குள், இங்குள்ள அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
புகார் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 1 - 6 வயது வரையிலான 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த மாதம் அடுத்தடுத்து உயிரிழந்தன.
சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்ததும், மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' மருந்து குடித்ததே இதற்கு காரணம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 'கோல்ட்ரிப்' மருந்துக்கு மாநிலம் முழுதும் தடை விதிக்கப்பட்டு, குழந்தைகள் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், குவாலியர் மாவட்டம் மொரார் நகரில் செயல்படும் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு, 'அசித்ரோமைசின் ஆன்டிபயாடிக்' மருந்து வழங்கப்பட்டது.
அதில் புழுக்கள் இருந்ததை அடுத்து, குழந்தையின் தாய் மருத்துவமனையில் புகார் தெரிவித்தார்.
சோதனை இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த அந்த மருந்து அனைத்திற்கும், 'சீல்' வைக்கப்பட்டது.
ஏற்கனவே, வழங்கப்பட்ட, 300க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களும் திரும்பப்பெறப்பட்டன.
'அசித்ரோமைசின்' மருந்து மாதிரிகள், போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து அரசு மருத்துவமனை மருந்து ஆய்வாளர் அனுபூதி சர்மா நேற்று கூறுகையில், “குழந்தைகளின் பல்வேறு நோய் தொற்றுக்கு, 'அசித்ரோமைசின்' மருந்து வழங்கப்படுகிறது.
''புகாரைத் தொடர்ந்து இருப்பில் இருந்த மருந்துகள் அனைத்தும், தனியாக எடுத்துச் சென்று சீல் வைக்கப்பட்டன. இதன் மாதிரிகள், போபால் மட்டுமின்றி, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
''முடிவுகள் வந்தபின், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.