பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கிறது இளம் தலைமுறையினர் போராட்டம்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கிறது இளம் தலைமுறையினர் போராட்டம்
ADDED : நவ 07, 2025 05:56 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
உலகெங்கும் உள்ள இளம் தலைமுறையினர், தங்கள் நாடுகளில் நடந்து வரும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். நம் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கையில் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்ததுடன், ஆளும் முக்கிய தலைவர்களை நாட்டை விட்டே வெளியேற வழி செய்தது.
பல ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் தற்போது இளைஞர்களின் எழுச்சி துவங்கியுள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் தற்போது இத்தகைய சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே, விலைவாசி உயர்வு, கோதுமைக்கான மானியம், மின்சாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இப்பகுதி மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்ந்தன. போராட்டக்காரர்களிடம் அரசு பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு இயல்புநிலை திரும்பியது.
இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தற்போது, அந்நாட்டு அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மாணவர்களுக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில், மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. எதிர்பாராத அளவுக்கு மதிப்பெண்கள் குறைந்ததையடுத்து, புதிய மதிப்பீட்டு முறையில் குறைபாடு இருப்பதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும், முசாபராபாதில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் உயர்வு, தேர்வுகளில் தோல்வி அடைந்த அல்லது குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், ஒரு தாளுக்கு 1,500 ரூபாய் என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் துவங்கப்பட்ட இப்போராட்டம், ஒரு மாணவர் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மாணவர்கள் டயர்களை எரித்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கல்வி கட்டண உயர்வுக்காக துவங்கிய மாணவர்கள் போராட்டம், தற்போது மோசமான உட்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பின்மை மற்றும் போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட அடிப்படை நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களாக மாணவர்கள் மறுவடிவமைப்பு செய்துள்ளனர்.
மொத்தத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் பொருளாதார சுமை மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராடுவதன் வாயிலாக, தங்கள் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என்பது இதன் வாயிலாக தெரிகிறது.

