அவதுாறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது; ஜாமினில் விடுவித்தது கோர்ட்
அவதுாறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது; ஜாமினில் விடுவித்தது கோர்ட்
UPDATED : ஜூன் 09, 2026 01:24 PM
ADDED : ஜூன் 09, 2026 07:17 AM

சென்னை: பெண்கள் பற்றி சமூக வலைதளத்தில் இழிவாகவும், அவதுாறாகவும் கருத்துகளை பதிவிட்டதற்காக, 'யூ டியூபர்' மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நிபந்தனை ஜாமினில் நீதிபதி விடுவித்தார்.
மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாரிதாஸ், 42; யூ டியூபர். இவர், சில தினங்களுக்கு முன், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து, சமூக வலைதளமான, 'எக்ஸ்' தளத்தில் படத்துடன், பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
'இது, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்ட படம். இப்படத்தை, மாரிதாஸ் வெளியிட்டு, அமைச்சர் கீர்த்தானா குறித்து, அவதுாறாகவும், இழிவாகவும் பதிவு வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், த.வெ.க., நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி, மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். 10க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை, மதுரை சென்று, மாரிதாசை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் தன்னை கைது செய்ய வந்துள்ளது பற்றி, மாரிதாசும், 'எக்ஸ்' தளத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார்.
நேற்று இரவு சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமினில் விடுவித்தார்.
மாரிதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., வெளியிட்டுள்ள பதிவு:
பாசிசம், பாயாசம் என்று வாய் கிழிய வசனம் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை பாசிசமா; பாயாசமா?
நீங்களும் செய்தியாளர்களை சந்திக்க மாட்டீர்கள்; கேள்வி கேட்கும் செய்தி நிறுவனங்களையும் முடக்கி விடுவீர்கள். 'யூ டியூப்' வாயிலாக பேசினால் கைது செய்வீர்கள். 'வாட் ப்ரோ, இட்ஸ் வெரி ராங் ப்ரோ...'
மாரிதாஸ் அப்படி என்ன பேசி விட்டார்... 'விஜய் ஒரு பொம்மை முதல்வர். பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ, போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி. இவர் மீது, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது' என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
இதற்காக அவருக்கு நோட்டீஸ் வழங்கி விசாரித்து இருக்கலாம். கைது செய்து ஜன நாயக குரலை நெரிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அரஜாகப் போக்கு கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பார்த்து விளையாடுங்கள்
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், 'என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்தி விட வேண்டாம்; தொடர்ந்து விமர்சியுங்கள்' என, மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, தற்போது அற்ப விமர்சனத்திற்கு கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டும் இருந்து விடுவதில்லை. உங்கள் கையில் இருக்கும் பந்து, நாளை மற்றவர்கள் கைகளுக்கு இடமாறும்; பார்த்து விளையாடுங்கள்.
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.
