நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; இப்போது சொல்கிறார் உக்ரைன் அதிபர்
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; இப்போது சொல்கிறார் உக்ரைன் அதிபர்
UPDATED : டிச 15, 2025 08:36 AM
ADDED : டிச 15, 2025 08:09 AM

கீவ்: மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தசூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி:
ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைனின் விருப்பம் நேட்டோவில் சேருவதாக இருந்தது; இவை உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சில கூட்டாளிகள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை. மாற்று ஏற்பாடுகள் இன்னும் வலுவான பாதுகாப்பை வழங்க முடியும். இன்று, உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள் ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க முடியும்.
அமைதியையும், ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என்பதற்கான உறுதியான உத்தரவாதங்களையும் உக்ரைன் விரும்புகிறது. உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் ரஷ்யா வேண்டுமென்றே மோதலை நீடிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போர் இதுவாகும். ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.

