ADDED : ஏப் 14, 2024 05:37 AM

'எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ' என, கடந்த தேர்தலில் தி.மு.க.,வினர் கூறினர். இந்த தேர்தலில், தி.மு.க.,வின் கூட்டணியான, காங்கிரசின் தேர்தல் அறிக்கை, 'இண்டியா' கூட்டணியினருக்கு வில்லனாகி விட்டது.
எதிர்க்கட்சியினரின் சிறு விஷயங்களைக் கூட, பெரிதாக்கி அதை திசை திருப்பி விடுவதில் சூரர், மோடி. இப்படித் தான், 'காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் கொள்கையோ' என, பிரசாரக் கூட்டங்களில் கேள்வி எழுப்பி, காங்கிரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார்.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் கட்சி, காங்கிரஸ் என, ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தல் அறிக்கை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் காங்கிரசார் என, பா.ஜ., சுட்டிக்காட்டுகிறது.
'முஸ்லிம்களூக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும். அவர்களின் உணவு, உடை மற்றும் அவர்களது பொது சட்டங்கள் பாதுகாக்கப்படும்' என, காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
ஏழை மகளிருக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கும், 'மகாலட்சுமி திட்டம்' காங்கிரசின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் ஒன்று. 'இதை பெரிதுபடுத்தாமல், முஸ்லிம்கள் குறித்து, மோடி சொல்வதற்கு பதில் சொல்லி மாட்டிக் கொண்டு விட்டோம்' என, சில சீனியர் காங்., தலைவர்கள் வருத்தப்படுகின்றனர்.
'மோடியின் தந்திரத்தில் காங்., சிக்காமல், 'பாசிடிவ்' ஆன வாக்குறுதிகளை பற்றி பேச வேண்டும்; ஆனால், ராகுலுக்கு அந்த அளவிற்கு அரசியல் ஞானம் இல்லை' என்ன செய்வது என, நொந்து போயுள்ளனர்.

