ADDED : ஜூலை 07, 2024 05:23 AM

பிரதமர் மோடி, சமீபத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அரசு துறைகளின் செயலர்களை தனியாக சந்தித்தார். இந்த இரண்டு சந்திப்பிலும், 'எல்லா விஷயங்களுக்கும் பிரதமர் அலுவலகத்தை எதிர்பார்க்காதீர்கள்; அரசு நடத்த உங்களுடைய ஐடியாக்களை கொடுங்கள்' என, அமைச்சரகளுக்கும், அதிகாரிகளுக்கும், 'அட்வைஸ்' அளித்துள்ளாராம் மோடி.
முன்பெல்லாம் பிரதமர் அலுவலகம் தான், திட்டங்களை செயல்படுத்த சொல்லும்; ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டதாக கூறப்படுகிறது. 'அமைச்சர்கள் புதிய திட்டங்களுடன் வர வேண்டும். நாட்டை நடத்துவது பிரதமர் அலுவலகம் என்கிற எண்ணம் வரக் கூடாது. பிரதமர் அலுவலகம், மக்களின் அலுவலகமாக செயல்பட வேண்டும்' என, கண்டிப்புடன் சொல்லி விட்டாராம் மோடி.
பிரதமர் பதவியேற்றவுடன், டில்லி சவுத் ப்ளாக்கில் உள்ள தன் அலுவலகம் சென்ற மோடியை, அனைத்து ஊழியர்களும் வரவேற்றனர். அப்போது, 'பிரதமர் ஆபீஸ் என்பது, மக்களின் அலுவலகமாக செயல்பட வேண்டும்' என, பேசினார் மோடி.
அதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்து விட்டாராம். 'பிரதமரின் அலுவலகம், மிகவும், 'பவர்புல்' ஆனது' என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது மோடியின் விருப்பமாம்.