ADDED : செப் 08, 2024 01:34 AM

லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் ஒரு பேட்டியில், 'பா.ஜ.,வை, ஆர்.எஸ்.எஸ்., இயக்குகிறதா?' என, கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 'பா.ஜ., தனியாகவே செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், கலாசாரம் மற்றும் சமூகம் சம்பந்தப்பட்டது' என நட்டா சொல்லியிருந்தார்.
இதனால், 'பா.ஜ.,வுக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் கருத்து வேறுபாடு உள்ளது' என சொல்லப்பட்டது. பிற்பாடு, 'அதெல்லாம் இல்லை; நல்ல உறவு நிலவுகிறது' என, மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதெல்லாம் உண்மையல்ல. இந்த இரண்டுக்கும் பல விஷயங்களில் பிரச்னைகள் தொடர்கின்றவாம். லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை பா.ஜ.,வால் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு காரணம் 'ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனைகளை பா.ஜ., அமல்படுத்தவில்லை' என சொல்லப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் சில விஷயங்களில் பா.ஜ., மீதும், அதன் தலைவர்கள் மீதும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பா.ஜ., தலைவர் நட்டா இப்போது மத்திய அமைச்சராகி விட்டார்; இருந்தாலும், கட்சி தலைவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவருக்கு பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மோடி உட்பட அனைவரையும் அரவணைத்து போகும் ஒருவரை தலைவராக்க வேண்டும் என, கட்சி விரும்புகிறதாம். ஆனால், 'புதியவர் வலுவான தலைவராக இருக்க வேண்டும். அவருடைய கருத்துகளை மற்றவர்கள் கேட்டு செயல்பட வேண்டும்' என்பது ஆர்.எஸ்.எஸ்., விருப்பமாம்.