UPDATED : மே 12, 2024 11:45 AM
ADDED : மே 12, 2024 06:31 AM

சமீபத்தில் தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா டில்லி வந்திருந்தார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால், தன் கணவர் விஜய்காந்த் சார்பாக பத்ம பூஷண் விருதைப் பெற்றுக் கொண்டார்.
பின், அங்கிருந்த ஒரு மத்திய சீனியர் அமைச்சரைச் சந்தித்து, 10 நிமிடங்கள் வரை ஆங்கிலத்தில் இருவரும் பேசிக் கொண்டிருதனராம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, என்ன நடக்கிறது என, சந்தேகப்பட்டனர்.
'ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பின், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனைப் போல, அ.தி.மு.க., - -பா.ஜ., உறவிற்கு பிரேமலதா பாலமாக இருப்பாரா' என, பல கேள்விகள் எழுந்துள்ளன.
விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டதும் நன்றி தெரிவித்திருந்தார் பிரேமலதா. அத்துடன், பா.ஜ., கூட்டணிக்கு வரவும் தயாராக இருந்தார்; ஆனால் பேரம் படியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த பிரேமலதா, பா.ஜ.,வை அதிகமாக கண்டுகொள்ளவில்லை.
இதையெல்லாம் வைத்து பார்த்தால், பா.ஜ.,வை தே.மு.தி.க., நெருங்குகிறதோ என, சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், இது குறித்து பா.ஜ.,வினர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.