ADDED : ஆக 05, 2024 02:12 AM

சென்னை: அரசுக்குச் சொந்தமான நிலங்களாக இருந்தாலும், அரசின் நேரடி நிர்வாகத்தில் இல்லாத வகைகளான நசூல் நிலங்களை, குத்தகை உள்ளிட்ட வழிகளில், தனியார் அமைப்புகளுக்கு தாரை வார்ப்பதற்கு தடை விதிக்கும் புதிய மசோதா, உத்தர பிரதேச சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், உ.பி.,யின் ஆளுங்கட்சி பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனினும், உ.பி., அரசின் இந்த மசோதா, நில உரிமை தொடர்பான பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைவதால், மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அராஜகம்
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீஹார், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இத்தகைய நிலங்கள், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், அரசு அனுமதியுடன் தனி நபர்கள், அமைப்புகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றன.
உத்தர பிரதேசத்தில் பல இடங்களில் இவ்வகை நிலங்கள், குறிப்பிட்ட சில பிரிவினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த நிலங்களை பயன்படுத்தி வருவோர், அராஜக செயல்பாடுகளில் ஈடுபடுவதால், பல பிரச்னைகள் எழுகின்றன.
அதனால் நசூல் நிலங்களை, தனியாருக்கு குத்தகை உள்ளிட்ட வகைகளில் வழங்குவதை முற்றிலுமாக தடை செய்யும் அவசர சட்டத்தை, உத்தர பிரதேச மாநில அரசு, கடந்த மார்ச் 7ல் பிறப்பித்தது. இதை அமல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இந்த அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில், நசூல் சொத்துக்கள் மசோதா - 2024, உத்தர பிரதேச சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது, ஆளுங்கட்சியின் சில எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மசோதா நிறைவேறியது.
இருப்பினும், சில மாற்றங்களுக்காக இந்த மசோதா, சட்டசபை தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அரசு நிலங்கள், குத்தகை உள்ளிட்ட வகைகளில் தனி நபர்கள், அமைப்புகளுக்கு தாரை வார்ப்பதற்கு, இந்த மசோதா முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து விவகாரங்களுக்கான சட்ட வல்லுனர் ஜி.ஷியாம்சுந்தர் கூறியதாவது:
கிழக்கு மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நசூல் நிலங்கள் காணப்படுகின்றன. நசூல் நிலங்களை, அரசு துறைகள் நேரடியாக பயன்படுத்துவது இல்லை.
இதனால், ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற நிலங்களை பயன்படுத்துவோர், அதற்காக மாவட்ட அளவில் வருவாய் துறை அதிகாரிகளிடம், நசூல் சான்றிதழ் பெறுவர்.
இதை அரசின் தடையின்மை சான்றிதழாகக் கருதி, சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பான சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படும். இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
இதில் அதிகரித்துள்ள முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், உத்தர பிரதேச அரசு இப்புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மசோதா சொல்வது என்ன?
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின், உத்தர பிரதேசத்தில் எந்த ஒரு பகுதியிலும் நசூல் எனப்படும் அரசு நிலங்கள், தனி நபர்கள், அமைப்புகளுக்கு முழு உரிமையாக வழங்கப்பட மாட்டாது
தற்போது குத்தகை முறையில் வழங்கப்பட்டுள்ள காலி நிலங்கள், குத்தகை காலம் முடிந்த பின் புதுப்பிக்கப்படாமல், அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் கட்ட பயன்படுத்தப்படும்
கடந்த 2020 ஜூலை 27க்கு முன் குத்தகை புதுப்பித்தலுக்கான கட்டணங்களை செலுத்தியவர்களுக்கு, தகுதி அடிப்படையில், அடுத்த 30 ஆண்டுகளுக்கான குத்தகை அனுமதிக்கப்படும். அவர்கள் இதுவரை எந்த விதிமீறலிலும் ஈடுபடாதவராக இருந்தால் மட்டுமே, இந்த சலுகை கிடைக்கும்
பொது பயன்பாட்டுக்கான நசூல் நிலங்களில் இருந்து, அப்புறப்படுத்தப்படும் நபர்களுக்கு, தகுதி அடிப்படையில் சட்டத்துக்கு உட்பட்டு, நிவாரணம், மறுவாழ்வுக்கான வசதிகள் வழங்கப்படும்
நசூல் நிலங்களில் வாழ்ந்து வரும் ஏழை குடும்பங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுக்கும்.