உத்தர பிரதேசம் முஸ்லிம்கள் ஓட்டு வெற்றியை நிர்ணயிக்குமா?
உத்தர பிரதேசம் முஸ்லிம்கள் ஓட்டு வெற்றியை நிர்ணயிக்குமா?
ADDED : ஏப் 24, 2024 11:36 PM

நாட்டிலேயே அதிக தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசத்தில், முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் ஓட்டளிக்கும் முறை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில், 80 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இரண்டாவது கட்டத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முஸ்லிம்கள் ஓட்டுகள் வெற்றியை நிர்ணயிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள், பாரம்பரியமாக, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு முழு ஆதரவாளர்களாக இருந்து வந்தனர். 1989ல் முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதியை துவக்கினார். அதுவரை, காங்கிரஸ் கட்சிக்கு, முஸ்லிம்கள் முழு ஆதரவை அளித்து வந்தனர். அதன்பின், சமாஜ்வாதி பக்கம் அது மாறியது. இதற்கிடையே, கன்ஷி ராம், பகுஜன் சமாஜ் கட்சியை துவக்கினார். அவர் தலித் மக்களுக்காக போராடுவதாக கூறினார். தற்போது, அந்தக் கட்சியை மாயாவதி நடத்தி வருகிறார்.
ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக போராடுவதற்காக துவக்கப்பட்டதாக கூறப்படும் சமாஜ்வாதியும், தலித் மக்களுக்கான கட்சியாக கூறப்படும் பகுஜன் சமாஜ் கட்சிகளும், அதன் அடிப்படை நோக்கத்தில் இருந்து விலகின.
முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களை மட்டுமே நம்பியிருந்த இந்த கட்சிகள், காலப் போக்கில், அது தவறு என்பதை உணர்ந்தன. சமாஜ்வாதியை, முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் கையகப்படுத்திய பின், அது ஹிந்துக்களுக்கு ஆதரவானதாக காட்டிக் கொண்டது. அதே நேரத்தில், முஸ்லிம்களும் தேவை என்று கூறி வந்தது.
பகுஜன் சமாஜ் கட்சியும், முஸ்லிம் வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியது. தற்போது, அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.
இந்த மூன்று கட்சிகளும், முஸ்லிம்கள் ஓட்டுகளுக்கு குறி வைத்துள்ளன. மாநிலத்தில், 19 முதல் 23 சதவீதம் வரை முஸ்லிம்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ராம்புரில், 50.57 சதவீதம், மொராதாபாதில், 42.12 சதவீதம் என, குறிப்பிட்ட, 14 மாவட்டங்களில், 25 சதவீதத்துக்கும் அதிகமாக முஸ்லிம்கள் உள்ளனர்.
கடந்த, 2017ல் மாநில தேர்தல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., மிகப் பெரும் வெற்றி பெற்றது. அது, 2019 லோக்சபா தேர்தலிலும், 2022 சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்தது.
வழக்கமாக முஸ்லிம்கள், பா.ஜ.,வுக்கு எதிராகவே ஓட்டுப் போடுவர் என்ற கருத்து உள்ளது. அதன்படி பார்த்தால், தற்போது, சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ், ஏ.ஐ.எம்.ஐ.எம்., என பல வாய்ப்புகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கு உள்ளது.
முஸ்லிம்களிலும், உட்பிரிவுகளின்படி அவரவர் மாறுபட்ட கட்சிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு பிரிந்தால், அது பா.ஜ.,வுக்கே சாதகமாக இருக்கும். அதே நேரத்தில், ஒரே எதிர்க்கட்சிக்கு மொத்தமாக ஓட்டு என்பதும் சாத்தியமில்லை என்று கூறுகின்றனர்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில், பா.ஜ., எட்டு இடங்களை வென்றது. அநேர நேரத்தில், 2019ல் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், 15 இடங்களில் வென்றன. ஆனால், தற்போது அவர்கள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
கடந்த, 2014 தேர்தலில் இருந்து, முஸ்லிம் ஓட்டுகள் தான் மிகவும் முக்கியம் என்ற வாதம் உடைந்தது. அது, 2019லும் தொடர்ந்தது. அதாவது, பா.ஜ.,வுக்கு முஸ்லிம்கள் ஓட்டளித்துள்ளனர். அதனால், முஸ்லிம்களின் ஓட்டுகள், அவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக மாற வாய்ப்புகள் உள்ளது
- நமது சிறப்பு நிருபர் -.
