ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் நிலமெடுப்புக்கு 10 ஆண்டுகளாகும்!
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் நிலமெடுப்புக்கு 10 ஆண்டுகளாகும்!
UPDATED : ஜூன் 29, 2024 05:40 AM
ADDED : ஜூன் 29, 2024 05:32 AM

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, நிலமெடுப்புக்கு 14 ஆண்டுகள் ஆனதால், நிலமெடுப்புக்கு ஆகும் கால அவகாசத்தைக் கணக்கிட்டே, ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களின் விரிவாக்கம், ஆண்டுக்கணக்கில் தாமதமாகி வருகிறது.
சட்டசபையில் அறிவிப்பு
இந்நிலையில், ஓசூரில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில், புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு, பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திலிருந்து, 150 கி.மீ., சுற்றளவுக்கு, புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்று சர்ச்சையும் எழுந்துள்ளது.
2008ல், இந்த விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, விமான நிலையத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 25 ஆண்டுகளுக்கு அதாவது 2033 வரை, புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்று, தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரின் அறிக்கையைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இதுபற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது.
தமிழக சட்டசபையிலும், நேற்று இதுபற்றி பேசப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி, ராஜா, ''நிச்சயமாக ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்,'' என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை, கொங்கு குளோபல் போரம் உள்ளிட்ட, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் வரவேற்றுள்ளனர்.
வரும் 2033 வரையிலும், பெங்களூரு சுற்று வட்டாரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கு, 148 ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலம் உட்பட, 643 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு, 2010ல் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் நிலமெடுப்புப் பணி, இந்த ஆண்டில்தான் முடிவடைந்துள்ளது.
அதிலும் இன்னும் ஐந்து ஏக்கருக்கும் குறைவான சிறிய பகுதி நிலம் கையகப்படுத்தப்படவில்லை. வெறும் 500 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்துவதற்கே, 14 ஆண்டு கள் ஆன நிலையில், புதிதாக இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு, நிச்சயமாக பத்தாண்டுகளுக்கு மேலாகும். அதற்குள், பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும்.
அதனால்தான், இப்போதே அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-