அடுத்த ஆண்டில் மட்டும் 12 நீதிபதிகள் ஓய்வு: புதியவர்கள் வரவுக்காக காத்திருக்கும் ஐகோர்ட்
அடுத்த ஆண்டில் மட்டும் 12 நீதிபதிகள் ஓய்வு: புதியவர்கள் வரவுக்காக காத்திருக்கும் ஐகோர்ட்
ADDED : டிச 31, 2024 03:58 AM

வரும், 2025ம் ஆண்டில், 66 நீதிபதிகளுடன், சென்னை உயர் நீதிமன்றம் தனது இன்னிங்சை துவக்குகிறது. அதேநேரத்தில், அடுத்த ஆண்டில் மட்டும் தலைமை நீதிபதி உள்ளிட்ட, 12 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். அதனால், காலியிடங்களை விரைந்து நிரப்ப, பரிந்துரைகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த, 2023 ஜனவரியில், 23 காலியிடங்களுடன், 52 நீதிபதிகளை கொண்டிருந்த சென்னை உயர் நீதிமன்றம், 2024ல், 67 நீதிபதிகளுடன், 'இன்னிங்ஸ்' துவக்கியது. இந்த ஆண்டில், ஐந்து நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். புதிய வரவுகளுடன் சேர்த்து, தற்போது, 66 நீதிபதிகள் உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75; காலியிடங்கள் இன்றி, முழுமையாக நீதிபதிகளை கொண்டு, உயர் நீதிமன்றம் இயங்கி பல ஆண்டுகளாகி விட்டது. 2025ல் மட்டும், 12 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர்.
நியமனம்
ஜனவரியில், நீதிபதி சேஷசாயி ஓய்வு பெறுகிறார். அவரை தொடர்ந்து, மே மாதம் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பவானி சுப்பராயன், ஹேமலதா, நக்கீரன் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.
ஜூன் மாதத்தில், நீதிபதிகள் டீக்காராமன், சிவஞானம், இளங்கோவன் ஆகியோரும், ஜூலையில் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சத்திகுமார் சுகுமார குரூப், டிசம்பரில், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆகியோரும் ஓய்வு பெறுகின்றனர். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார்.
ஓய்வு பெறும் நீதிபதிகளில், வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்கள் நான்கு பேர்; கீழமை நீதிமன்றங்களில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்கள் எட்டு பேர். 2026ல் மூன்று நீதிபதிகளும், 2027ல் நான்கு நீதிபதிகளும், 2028ல் எட்டு நீதிபதிகளும் ஓய்வு பெறுகின்றனர்.
கடைசியாக, 2023ல் மட்டும், 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்; இந்த ஆண்டில், மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். கணிசமான எண்ணிக்கையில், 2025ல் நீதிபதிகள் ஓய்வு பெறுவதால், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகள் அனுப்புவதை விரைவுபடுத்த வேண்டும் என, வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகரிக்கும்
காலியிடங்கள் ஏற்படுவதை கணக்கிட்டு, ஆறு மாதங்களுக்கு முன்னரே பரிந்துரைகளை அனுப்பலாம். அதன்படி, ஆறு மாதங்களில் எட்டு நீதிபதிகள் பணியிடங்கள் காலியாவதால், பரிந்துரைகளை விரைவில் அனுப்ப முடியும். நீதிபதிகள் ஓய்வு பெறும் போது, காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
நீதிபதிகள் பதவிக்கு, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தும், இன்னும் சிலருக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் உள்ளது. வழக்குகள் தேக்கத்துக்கு காலியிடங்களை நிரப்பாததும் முக்கிய காரணம். காலியிடங்களை விரைந்து நிரப்புவதன் வாயிலாக, பைசலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நீதிபதிகள் நியமனம் குறித்து, இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் கூறும் போது, ''நன்கு பயிற்சி பெற்ற வழக்கறிஞர்களை, நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் பரிந்துரைகள் இருக்க வேண்டும். ''இதுகுறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை, நீதிபதிகள் நியமனத்தில் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் -