'டில்லி உஷ்ஷ்ஷ்...': 30 'சீட்' அதிகமாக கிடைக்கும்?
'டில்லி உஷ்ஷ்ஷ்...': 30 'சீட்' அதிகமாக கிடைக்கும்?
UPDATED : மே 12, 2024 11:50 AM
ADDED : மே 12, 2024 04:19 AM

'காங்கிரசுக்கு எதிரி காங்கிரசே தான்' என, சில காங்., தலைவர்கள் கூறுவது உண்மை தான். முதலில் காங்கிரசின் அயலக தலைவர் சாம் பிட்ரோடா, 'தென் மாநிலத்தவர்கள் ஆப்ரிக்கர்கள் மாதிரி உள்ளனர்' என, உளறினார். அவர் கூறியதோ வேறு ஒரு அர்த்தத்தில். ஆனால், பா.ஜ.,வினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
ஸ்டாலின் இதற்கு வாயே திறக்கவில்லை; காங்கிரசின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் தென் மாநிலத்தவர். அவரும் மவுனமாக இருந்தார். கடைசியில், பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி, ராகுல் சொல்ல, சாம் பிட்ரோடா பதவி விலகினார்.
இது நடந்து ஒரு வாரத்திற்குள், இன்னொரு காங்., தலைவர் மணி சங்கர் அய்யர், 'இந்தியா, பாகிஸ்தானை மதிக்க வேண்டும். அவர்களிடம் அணுகுண்டு உள்ளது' என, ஒரு குண்டைத் துாக்கிப் போட்டார். இதற்காக காத்திருந்த மோடியும், பா.ஜ.,வும் இதைப் பிடித்துக் கொண்டனர்; கடுமையாக காங்கிரசை சாடி வருகின்றனர்.
'மணிசங்கர் அய்யர் சொன்னதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, வழக்கம் போல காங்., கூறியுள்ளது. ஆனால், தேர்தல் களத்தில் குறிப்பாக, வடமாநிலத்தில் நிலைமை காங்கிரசுக்கு மோசமாக உள்ளது.
கடந்த, 2004ல், 'மோடி டீ விற்பவர் என சொல்லி, பா.ஜ.,வை வெற்றி பெற வைத்தவர், இந்த மணிசங்கர் அய்யர்; இப்போது மீண்டும் பா.ஜ.,வை வெற்றி பெற உதவி புரிந்துள்ளார்' என, பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஐ.எப்.எஸ்., அதிகாரியான மணி அய்யர், இந்திய துாதராக பாகிஸ்தானில் பணியாற்றியவர். பாசம் போகவில்லை போலிருக்கிறது.
'சாம், மணி இருவரின் பேச்சால் எங்களுக்கு, 30 சீட்கள் அதிகமாக கிடைக்கும்' என, மார்தட்டிக் கொள்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.