44 சதவீத எம்.பி.,க்கள் மீது வழக்கு: ஏ.டி.ஆர்., அறிக்கையில் தகவல்
44 சதவீத எம்.பி.,க்கள் மீது வழக்கு: ஏ.டி.ஆர்., அறிக்கையில் தகவல்
ADDED : மார் 30, 2024 02:29 AM

புதுடில்லி: லோக்சபா எம்.பி.,க்களில் 513 பேரின் பிரமாணப் பத்திரத்தை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்தது. இதில், 225 பேர் அதாவது 44 சதவீதத்தினர் மீது, கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, ஏ.டி.ஆர்., அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தற்போது எம்.பி.,க்களாக உள்ள 513 பேரின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 29 சதவீதம் பேர், கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
இவற்றில் ஒன்பது பேர், கொலை வழக்குகளை எதிர்கொள்கின்றனர்; ஐந்து பேர் பா.ஜ., - எம்.பி.,க்கள். மேலும், 28 எம்.பி.,க்கள் கொலை முயற்சி வழக்கு இருப்பதாக அறிவித்து உள்ளனர். இதில், 21 பேர் பா.ஜ., வைச் சேர்ந்தவர்கள்.
உ.பி., -- மஹாராஷ்டிரா, பீஹார், ஆந்திரா, தெலுங்கானா, ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.பி.,க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
பா.ஜ., மற்றும் காங்கிரசில் கோடீஸ்வர எம்.பி.,க்கள் உள்ளனர்.
காங்கிரசைச் சேர்ந்த ம.பி., முன்னாள் முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் மற்றும் சுயேச்சை எம்.பி., கனுமுரு ரகுராம கிருஷ்ண ராஜு ஆகியோர், அதிக சொத்துகளை கொண்ட முதல் மூன்று எம்.பி., ஆவர்.
சிட்டிங் எம்.பி.,க் களில் 73 சதவீதத்தினர், பட்டதாரி அல்லது உயர் கல்வித் தகுதிகளை பெற்றுள்ளனர். அதே சமயம், லோக்சபாவில் 15 சதவீதம் மட்டுமே பெண் எம்.பி.,க்கள் உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

