ADDED : ஜூன் 01, 2024 05:17 AM

மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கும்பட்சத்தில், தி.மு.க.,வுக்கு 6 அமைச்சர்கள் பெறுவது தொடர்பாக, தி.மு.க., தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் இன்று இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், மாநில கட்சிகள் ஆதரவு கிடைக்காமல், ஆட்சி அமைக்க முடியாது என்றும், காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், தி.மு.க., கருதுகிறது.
அதுபோன்ற நிலை உருவாகி, தி.மு.க., ஆதரவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையுமானால், தி.மு.க.,வுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் கேட்கலாம் என்ற ஆலோசனை, அறிவாலயத்தில் நடந்துள்ளது.
அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, 35 எம்.பி.,க்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டியா கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக, திரிணாமுல் காங்கிரசும், தி.மு.க.,வும் தான் அதிக எம்.பி.,க்கள் பெற்ற கட்சிகளாக இருக்கும்.
அதனால், மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகள் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர், 4 கேபினட் அமைச்சர்கள், 2 இணை அமைச்சர் பதவிகளை பெற்றால், தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கும், ஆட்சி நிர்வாகத்திற்கும் பெரிதும் துணையாக இருக்கும் என கருதப்படுகிறது.
தி.மு.க., சார்பில் செல்வகணபதி, கனிமொழி, அருண் நேரு, கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோரை அமைச்சராக்க யோசித்து வருகின்றனர். சபாநாயகர் பொறுப்பில் டி.ஆர்.பாலுவை பரிந்துரைக்கும் யோசனையும் உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இதற்கிடையில், தமிழக காங்., தரப்பில் இருந்து இம்முறை எப்படியும் மத்திய அமைச்சராகி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜோதிமணி, மாணிக் தாகூர் ஆகியோர், டில்லியின் முக்கியத் தலைவர்கள் வாயிலாக முயற்சித்து வரும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
- நமது நிருபர் -