அங்கீகாரமற்ற 6,000 'பிளே ஸ்கூல்'கள்: குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
அங்கீகாரமற்ற 6,000 'பிளே ஸ்கூல்'கள்: குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : பிப் 23, 2025 12:49 AM

தமிழகத்தில், 6,000த்துக்கும் மேற்பட்ட, 'பிளே ஸ்கூல்' அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், ஆய்வு செய்தல், கண்காணித்தல் உள்ளிட்டவற்றுக்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். தனியார் நிர்வாகத்தால் நடத்தப்படும், பிரைமரி, நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு செய்து, மூன்று ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின், நீதிமன்ற அறிவுறுத்தல்படி, பிளே ஸ்கூல்களுக்கும் அங்கீகாரம் பெற, 2016ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, 5.5 சென்ட் நிலம், தனி கட்டடம், மாடியாக இருக்கக்கூடாது, தகுதியான ஆசிரியர்கள், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், சில ஆண்டுகளாக அங்கீகாரம் பெறாத பிளே ஸ்கூல்களை ஆய்வு செய்யவோ, மூடவோ, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாளுக்கு நாள் பிளே ஸ்கூல்கள் அதிகரித்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கும் நிலையில், அதில், ஐந்துக்கு மட்டும் அங்கீகாரம் உள்ளது. இதேநிலையே தமிழகம் முழுதும் உள்ளது.
தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சிறிதும் பாதுகாப்பின்றி மாடி கட்டடம், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், விளையாட இடம் இல்லாதது உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் அங்கீகாரமற்ற, பிளே ஸ்கூல்கள் இயங்குகின்றன. அங்கு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை விடவும், கட்டணம் குறைவாக உள்ளதால், பெற்றோரும் ஆபத்தை உணராமல், குழந்தைகளை சேர்க்கின்றனர்.
மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்தால், 'நோட்டீஸ்' வழங்கி, அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறார். அங்கீகாரம் இல்லாமல் நடத்தியதற்கு அபராதம் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அசம்பாவிதம் நடந்த பின், அவசரமாக அரசாணை வெளியிடுவது, ஆய்வு செய்வது மட்டும், குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்காது. அசம்பாவிதம் நடக்கும் முன் தடுக்க வேண்டும். தமிழகம் முழுதும், 6,000க்கும் மேற்பட்ட பிளே ஸ்கூல்கள் அனுமதியின்றி இயங்குவதால், இதற்கு அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.