விவசாயிகள் வருவாயை அதிகரிக்க ரூ.14,000 கோடியில் 7 திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விவசாயிகள் வருவாயை அதிகரிக்க ரூ.14,000 கோடியில் 7 திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : செப் 03, 2024 12:31 AM

புதுடில்லி: விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தோடு, வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சியை முன்வைத்து, 13,966 கோடி ரூபாய் முதலீட்டில், ஏழு முக்கிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் வேளாண் துறையில் ஏழு முக்கிய திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி:
உணவுக்கான பயிர் அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்துக்கு 3,979 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். வரும், 2047ம் ஆண்டுக்குள், பருவநிலை மாறுபாடுக்கு ஏற்ற வகையில் பயிரிடுவதற்கு விவசாயிகளை தயார் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதில், ஆராய்ச்சி மற்றும் கல்வி, பயிர் மரபணு வளங்கள் நிர்வாகம், உணவு மற்றும் கால்நடை தீவன பயிர்களின் மரபணுவை மேம்படுத்துவது, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிர் மேம்பாடு, வர்த்தக பயிர்கள் மேம்பாடு, பூச்சிகள் உள்ளிட்டவை தொடர்பான ஆராய்ச்சி, ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்
வேளாண் கல்வி, நிர்வாகம் மற்றும் சமூக அறிவியல் திட்டங்கள், 2,291 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும். இதை இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொள்ளும். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி நவீனப்படுத்தப்படும். பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்கும் வகையில், இயற்கை விவசாயம் உள்ளிட்டவை இதில் ஊக்குவிக்கப்படும். இதற்காக, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்
வேளாண் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், 2,817 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும்
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில், கால்நடை சுகாதாரம் மற்றும் அவற்றின் உற்பத்தியை மேம்படுத்த, 1,702 கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் வாயிலாக பால் உற்பத்தி அதிகரிக்கும்.
தோட்டப் பயிர்கள் துறையில் நீடித்த வளர்ச்சியை உருவாக்க, 860 கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தி தரும். இதில் காய்கறிகள், பூக்கள், மூலிகைப் பொருட்கள், மருத்துவ குணமுள்ள செடிகள் உள்ளிட்டவை அடங்கும்
தற்போது நாடு முழுதும், 700 கே.வி.கே., எனப்படும் கிருஷி விக்யான் கேந்திரா எனும் விவசாய அறிவியல் மையங்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்துவதற்கும், வலுபடுத்துவதற்கும், 1,202 கோடி ரூபாய் செலவிடப்படும்
இயற்கை வளங்கள் நிர்வாக திட்டங்களுக்கு, 1,115 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.