UPDATED : ஆக 01, 2024 04:36 AM
ADDED : ஆக 01, 2024 01:27 AM

'சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் எப்போது முடிக்கப்படும் என்பதற்கான காலக்கெடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை - சேலம் எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை திட்டம் குறித்து, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர், நிதின் கட்கரி ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது:
சென்னை - சேலம் இடையே எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை வழங்கப்பட்டு விட்டது.
ஆனாலும் வழக்குகள் மற்றும் சில அனுமதிகளை பெற வேண்டிய விஷயங்களில் கால தாமதம் தொடர்கின்றன. இதனால், இந்த திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதுதவிர, நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள், திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு ஆகியவை இன்னும் முடிவாகவில்லை.
இவை எல்லாம் முடிந்த பிறகே, திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் போன்றவற்றை இறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது டில்லி நிருபர் -