9.19 டி.எம்.சி., நீரை திறக்க காவிரி கூட்டத்தில் தமிழகம் கறார்
9.19 டி.எம்.சி., நீரை திறக்க காவிரி கூட்டத்தில் தமிழகம் கறார்
ADDED : ஜூன் 15, 2024 02:22 AM

'ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 9.19 டி.எம்.சி., அளவு தண்ணீரை, தாமதமின்றி வழங்க வேண்டும்' என, காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவின் 97வது ஆலோசனைக் கூட்டம், தலைவர் வினித் குப்தா தலைமையில் டில்லியில் நேற்று நடந்துது.
கூட்டம் துவங்கியதுமே, கர்நாடக அரசின் சார்பில் வந்திருந்த அதிகாரிகள் வழக்கம்போல தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தங்களால் தண்ணீர் திறந்துவிட இயலாது என கூறினர்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பேசியதாவது:
மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. ஜூன் 1 முதல் 11ம் தேதி வரை பிலிகுண்டுலுவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3.30 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், 1.31 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. மீதம் 2.05 டி.எம்.சி., நீர் தர வேண்டியுள்ளது.
மேட்டூர் அணையில் 14 டி.எம்.சி., மட்டுமே உள்ளது.
இதில், வினாடிக்கு 1,800 கன அடி நீர், குடிநீர் தேவைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கிஉள்ளது.
நடப்பாண்டு பருவமழை இயல்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும். காவிரி படுகையில் இயல்பை விட மழை அதிகமாக பெய்து உள்ளது.
கர்நாடகாவின் நான்கு அணைகளின் நீர்இருப்பு மற்றும் இம்மாதம் 13ம்தேதி வரை கிடைத்த நீரின் அளவை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு, ஜூன் மாதம் வழங்க வேண்டிய நீர், பிலுகுண்டுலுவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்திஉள்ளனர்.
- நமது டில்லி நிருபர் -