விதிமீறல் கட்டடங்கள் கண்காணிப்பு; கலெக்டர் தலைமையிலான குழு மவுனம்
விதிமீறல் கட்டடங்கள் கண்காணிப்பு; கலெக்டர் தலைமையிலான குழு மவுனம்
ADDED : மே 13, 2024 02:53 AM

சென்னை : உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விதிமீறல் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட, மாவட்ட அளவிலான குழுக்களின் கூட்டம் நடத்தப்படாதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தாலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
சிறிய அளவிலான குடியிருப்புகள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இருந்தும், உள்ளாட்சிகள் அலட்சியமாக உள்ளன.
சென்னையில் பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி வாயிலாக, விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், புகார்களுடன் ஒப்பிடுகையில் நடவடிக்கை குறைவாக உள்ளது.
இந்நிலையில், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கவும், அது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்கவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை, சில உத்தரவுகளை பிறப்பித்தது.
இதன் அடிப்படையில், கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்க, நகராட்சி நிர்வாகத்துறை மார்ச்சில் உத்தரவிட்டது.
அதன்படி, கலெக்டர் தலைமையில் போலீஸ் கமிஷனர், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகர், ஊரமைப்பு துறை துணை இயக்குனர், நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர், மின்வாரிய செயற்பொறியாளர் ஆகியோர் அடங்கிய மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் இதற்கான குழுவின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
பிற மாவட்டங்களில் கலெக்டர் தலைமையிலான குழுக்கள் என்ன செய்கின்றன என்றும் தெரியவில்லை. மாதந்தோறும் இக்குழுவின் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தொடர்ந்து கூட்டம் நடத்தப்படாமல் இருந்தால், அது புதிய பிரச்னையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.