UPDATED : மார் 30, 2024 07:36 AM
ADDED : மார் 30, 2024 12:54 AM

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக, மிகப்பெரிய நகரமாக கோவை உருவெடுத்துள்ளது. நகரம் வளர்ந்து வரும் வேகத்துக்கேற்ப, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
ஏனெனில், கோவையில் நாளுக்கு நாள், வாகன பெருக்கம் எக்குத்தப்பாய் அதிகரித்து வருகிறது; எந்த சாலையில் சென்றாலும், நெருக்கடியில் சிக்கி, ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது.
வாகனங்களில் பயணிப்போர் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதில், நகரப்பகுதி வழியாகவே, என்.எச்., 544 சேலம் - கொச்சின், என்.எச்., 81 திருச்சி ரோடு, என்.எச்.,181 மேட்டுப்பாளையம் ரோடு, என்.எச்., 82 பொள்ளாச்சி ரோடு, என்.எச்., 948 சத்தியமங்கலம் ரோடு ஆகிய, ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன.
அதாவது, கேரளாவில் இருந்து சென்னை, சேலம் மற்றும் கர்நாடகாவுக்கும், அப்பகுதிகளில் இருந்து கேரளாவுக்கும் செல்வதற்கான, முக்கியமான வழித்தடமாக கோவை இருக்கிறது.
இதன் காரணமாக, இவ்வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், நகர் பகுதிக்குள் வந்து செல்வதால், தேவையற்ற நெருக்கடி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஓரிடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்குச் செல்ல வேண்டுமெனில், 45 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை, தாமதம் ஏற்படுகிறது.
போலீசார் ஆய்வு
சமீபத்தில், போக்குவரத்து போலீசார் எடுத்த ஆய்வில், 26 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுவதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டது. வெளியூர், வெளிமாநில வாகனங்களின் கணக்கு தனி. இவ்வாகனங்கள், கோவை நகர் பகுதிக்குள் வந்து செல்வதால் தேவையற்ற அலைச்சல், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. இதுபோலவே, அனைத்து பிரதான சாலைகளிலும் பிரச்னை இருக்கிறது.
இதற்கு தற்காலிக தீர்வாக, ஒவ்வொரு ரோட்டிலும் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் கட்டுகின்றனர். இது நிரந்தர தீர்வாக அமையாது. இதற்கு நிரந்தர தீர்வு காண, நகருக்கு வெளியே புறவழிச்சாலை (ரிங் ரோடு) ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.
புறவழிச்சாலைகள்
ஆலோசனைகள், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன. பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரத்தில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு மேற்குப்புறவழிச்சாலை திட்டம்; இதேபோல், மதுக்கரையில் துவங்கி, மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை உருவாக்கும் திட்டம்தான் அது.
மேற்குப்புறவழிச்சாலை திட்டத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறை கையில் எடுத்து, முதல்கட்டமாக, 250 கோடி ரூபாய் ஒதுக்கி, பணிகளை துவக்கியுள்ளது. இரண்டாவது 'பேக்கேஜ்' பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கிழக்குப்புற வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு நிலம் தேவை; கையகப்படுத்த வேண்டிய நிலம் எவ்வளவு என, ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து, டில்லியில் உள்ள நிலம் கையகப்படுத்தும் கமிட்டியிடம், விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
நான்கு வழிச்சாலையாக அமைப்பதா; ஆறு வழிச்சாலையாக அமைப்பதா என, முடிவெடுத்து அனுமதி கொடுக்க வேண்டும். இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
எல் அண்டு டி சாலை விரிவாக்கம்
அடுத்ததாக, 27 கி.மீ., நீளமுள்ள எல் அண்டு டி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் கொச்சின் சாலையில், நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான வழித்தடமே, எல் அண்டு டி சாலை எனப்படுகிறது. இச்சாலையை பராமரிக்கும் பொறுப்பு, 'எல் அண்டு டி' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இருவழிச்சாலையாக மிகவும் குறுகலாக இருக்கிறது; அதிக கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில், இயக்கப்படும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி, உயிரிழப்புகள் ஏற்படுவதால், இச்சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, கலெக்டர் தலைமையில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், பலமுறை வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஆறு வழிச்சாலை
இச்சாலை, சேலத்தில் இருந்து நீலாம்பூர் வரை ஆறு வழியாக அமைந்துள்ளது; வாளையார் முதல் மதுக்கரை வரை நான்கு வழியாக அமைந்திருக்கிறது. இடைப்பட்ட, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான, 27 கி.மீ., நீளத்துக்கு இரு வழிச்சாலையாக, 10 மீட்டர் அகலத்துக்கு இருக்கிறது. இதை நான்கு வழியாகவோ அல்லது ஆறு வழியாகவோ அகலப்படுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கள ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்திருக்கின்றனர். இவ்வழித்தடத்தில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடும் இரு இடங்களில் மேம்பாலம், நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய பாலம், நீரோடைகள் குறுக்கிடும் இடங்களில் சிறிய பாலம், செட்டிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால், எல் அண்டு டி நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தால், சாலையை அகலப்படுத்த முடியாத நிலையில்,. நெடுஞ்சாலைத்துறையினர் இருக்கின்றனர்.
முழுமையான ரிங் ரோடு
மேற்குப்புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி விட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் எல் அண்டு டி சாலையை அகலப்படுத்தும் பணியையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் கிழக்கு புறவழிச்சாலை பணியையும் செய்தால், கோவைக்கு வெளியே புறநகர் பகுதியில் முழுமையான 'ரிங் ரோடு' அமைந்து விடும்.
வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், நகருக்குள் நுழைவது தவிர்க்கப்படும்; நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.
நகர்ப்பகுதிக்கேற்ப, புறநகர் பகுதிகளும் வளர்ச்சி அடையும். அதனால், இப்பணிகளை இவ்விரு துறையினரும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்விரு புறவழிச்சாலைகளும், கோவைக்கு மிக முக்கியமானது என்பதால், வரப்போகும் லோக்சபா தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., மத்தியில் அமையும் அரசிடம் வலியுறுத்தி, தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று, இவ்விரு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

