மூளையை தின்னும் அமீபாவால் அரிய வகை நோய்; குளத்தில் குளிக்கும்போது எச்சரிக்கை அவசியம்
மூளையை தின்னும் அமீபாவால் அரிய வகை நோய்; குளத்தில் குளிக்கும்போது எச்சரிக்கை அவசியம்
UPDATED : மே 26, 2024 04:07 AM
ADDED : மே 25, 2024 08:28 PM

அமீபாவின் மூளையை தின்னும் அரிய வகை நோயால், கேரளா சிறுமி உயிரிழந்த நிலையில், ஏரி, குளங்கள், ஆறுகளில் குளிக்கும்போது, அந்நோய் குறித்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் அவசியம் என்கின்றனர், டாக்டர்கள்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னியூரை சேர்ந்த ஐந்து வயது சிறுமி, மே 1ம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளார். அந்த சிறுமி காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அசுத்தமான தண்ணீரில் குளித்ததால், மூளை தின்னும் அரியவகை நோயான, 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சிறுமியுடன் குளித்த மேலும் இரண்டு குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படவில்லை.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் காணப்படும் மூளை தின்னும் அமீபா நோய், இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 2016ல், முதல் அமீபா நோயாளி கண்டறியப்பட்டார். தொடர்ந்து, 2019 , 2020, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில், அந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 10,000 பேரில் ஒருவரை பாதிக்கும் இந்நோய் தாக்கிய அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை, மூளை தின்னும் நோய் பாதிப்பு இல்லையென்றாலும், கேரளா அண்டை மாநிலமாக இருப்பதால், தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
பாதிப்பு
இதுகுறித்து, அரசு பொது நல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது:
ஒற்றை செல் உயிரினமான அமீபா, குளங்கள், ஏரிகள், ஆறுகளில் அதிகம் காணப்படும். அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போதோ, முகம் கழுவும்போதோ, மூக்கு வழியாக, நுகர்தலுக்கான நரம்பை தாக்கி சேதப்படுத்தி, மூளையில் தொற்றை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
உலகளவில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் அமீபா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அனைவரையும் தாக்காது. தாக்கினால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
மலப்புரத்தில் அசுத்தமான நீரில் மூன்று பேர் குளித்த நிலையில், ஒரு சிறுமிதான் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மற்ற இரண்டு சிறுமிகளுக்கும், அமீபா மூக்கு வழியாக செல்லாமல் இருந்திருக்கலாம். இல்லையென்றால், உயிரிழந்த சிறுமிக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்திருக்கலாம். அதனால் தான், இந்நோய் அரியவகை நோயாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், அசுத்தமான நீரில் குளிக்கும்போதோ, வேறு வகையில் பயன்படுத்தும் போதோ, பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஒருவேளை, குளம், ஏரிகளில் குளித்த, ஓரிரு வாரங்களுக்குள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதும், நீங்கள் குளித்த விபரங்களையும் தெரியப்படுத்துவதும் மிக முக்கியம். அப்போது தான், தங்களுக்கான நோய் பாதிப்பு குறித்து அறிந்து, டாக்டரால் உடனடியாக சிகிச்சையை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு தேவை
அப்பல்லோ மருத்துவமனை தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன் கூறியதாவது:
அமீபா வகைகளில், 'அகந்தமோபா, நெக்லேரியா' ஆகிய இரண்டு தான், பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த வகை அமீபா அசுத்தமான நீரில் மட்டுமல்லாது, நன்னீரிலும் வாழக்கூடியது.
அமீபாக்களின் வாழ்விடமே தண்ணீர் தான். அதனால், குளங்கள், ஏரிகள், கிணறுகள் போன்ற தண்ணீரில் குளிக்க கூடாதா என்றால், எச்சரிக்கையுடன் குளிப்பது அவசியம். அதிகம் பாசி செடிகள் படர்ந்து காணப்படும் தண்ணீரில் குளிக்கும்போது மிகவும் கவணம் தேவை.
மூக்கு வழியாக சென்று மூளையை தாக்கும் இந்நோயை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம். இவற்றின் ஆரம்ப அறிகுறியாக மூளை காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படும். அரிய வகை உயிரியான அமீபா, அனைத்து வகை தண்ணீரிலும் வாழக் கூடியது. அமீபா குறித்து, எச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.