கோவில் சுவரின் சிமென்ட் பூச்சு உதிர்ந்ததால் வரலாற்றை வெளிப்படுத்திய வட்டெழுத்து கல்வெட்டு
கோவில் சுவரின் சிமென்ட் பூச்சு உதிர்ந்ததால் வரலாற்றை வெளிப்படுத்திய வட்டெழுத்து கல்வெட்டு
UPDATED : ஆக 01, 2024 03:32 AM
ADDED : ஆக 01, 2024 03:30 AM

சென்னை: திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள தளிகீஸ்வரர் கோவில் சுவரில் பூசப்பட்டிருந்த சிமென்ட் பூச்சு உதிர்ந்ததால், 1100 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழமையான கல்வெட்டு வெளிப்பட்டுள்ளது.
இதை அறிந்த அழகுமலை ஊராட்சி மன்ற தலைவர் துாயமணி, கோவில் தர்மகர்த்தா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர், அங்கு செயல்பட்டு வரும் வீரராசேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு, அம்மையத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ரவிகுமார், பொன்னுசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
![]() |
இதுகுறித்து, ரவிகுமார் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து தென்கிழக்காக அவினாசி முதல் அவினாசிபாளையம் வரையில் செல்லும் பெருவழியில், 14வது கி.மீட்டரில் உள்ளது கோவில்பாளையம் எனும் கிராமம்.
கேரளாவையும், தமிழகத்தையும் இணைப்பது, பாலக்காட்டு கணவாய். மேற்குத் தொடர்ச்சி மலைகளில், இரு மலைகளுக்கு இடையேயான பெருவழியை தான் கணவாய் என்கிறோம்.
![]() |
பொதுவாக, கொங்கு மண்டலத்தில், 9ம் நுாற்றாண்டில் தான் கற்கோவில்களை கட்டும் வழக்கம் ஏற்பட்டது. இந்த ஊரிலும், அதே காலகட்டத்தில் தான் தளிகீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு சாட்சியாக, ஒரு இடைக்கால சேரர் மன்னரின் வட்டெழுத்து கல்வெட்டும், எட்டு பிற்கால கொங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் வெளிப்பட்டுள்ளன.
![]() |
கல்வெட்டு தகவல்
இந்த கோவிலுக்கு, 1978ல், கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது தான், சுவரில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளின் மீது, சிமென்ட் பூசி வண்ணம் அடித்துள்ளனர். தற்போது, அந்த காரை உதிர்ந்ததால், அந்த கல்வெட்டுகள் வெளியே தெரிகின்றன.
தளிகீஸ்வரர் கோவில், அர்த்த மண்டபத்தின் முன்பக்க வலது சுவரில், 12 வரிகளுடன் எழுத்துகள் உள்ள ஒரு வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. அதில், 'கோக்கண்ட வீரநாராயணற்குச் செல்லா நின்ற வாண்ட - பனணவ - கீருடப்பாழ' என்ற சிதைந்த வாசகம் உள்ளது.
இதைப் படித்த கல்வெட்டு ஆய்வாளர் சுப்பராயலு, 'கொங்கு மண்டலத்தின் மத்திய பகுதிகளை ஆண்ட, இடைக்கால சேரர் மரபைச் சேர்ந்த கோக்கண்டன் என்பவரால், இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. மற்ற செய்திகள் தெளிவாக இல்லை' என்றார்.
அடுத்தடுத்த கல்வெட்டுகள், பிற்கால கொங்கு சோழர் காலத்தைச் சேர்ந்தவை. 1207 முதல் 1256 வரை ஆட்சி செய்த வீரராசேந்திரன் கால கல்வெட்டுகளும், அடுத்த நிலையில், 1273 முதல் 1305 வரை ஆண்ட, அவரின் பேரன் விக்கிரம சோழன் காலத்தில், இக்கோவில் பராமரிப்பு பணிகளும், வழிபாடுகளும், சிறப்பாக நடந்ததை கூறுகின்றன.
இவற்றின் வாயிலாக, இந்த ஊர், பண்டைய கொங்கு 24 நாடுகளில், பொங்லுார்க்கா நாட்டைச் சேர்ந்தது என்பது தெரிகிறது. மேலும் ஒரு கல்வெட்டில், ஒரு பெண், நந்தா விளக்கெரிக்க, பலஞ்சலாகை அச்சு காசு தானமளித்த செய்தி உள்ளது. மற்ற கல்வெட்டுகள் கிடைக்காததால், முழுமையான வரலாறை அறிய முடியவில்லை.
இதுபோல் பல கோவில்களின் சுவரில் சிமென்ட் பூசி, சுண்ணாம்பு அடிக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு செய்யாமல், தொல்லியல் ஆய்வாளர்களின் உதவியுடன், வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள் இருந்தால், அவற்றை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.