'குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கை; வெற்றியை பாதிக்காது'
'குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கை; வெற்றியை பாதிக்காது'
ADDED : ஏப் 14, 2024 03:24 AM

''அசாமில், மியான் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்ட பலதார மணம் மற்றும் குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பா.ஜ.,வின் தேர்தல் வெற்றியை பாதிக்காது,'' என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள, 14 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. இங்குள்ள பெரும்பாலான தொகுதிகளில், வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்த மியான் சமூகத்தினரே அதிகம் வசிக்கின்றனர்.
இவர்கள், முஸ்லிம்களில் ஒரு பிரிவினர். அவர்களின் ஓட்டுகளே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
இங்கு ஆளும் பா.ஜ., இந்த சமூகத்தினருக்கு மேற்கொண்ட ஏராளமான பல நல்ல திட்டங்களை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, முஸ்லிம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்துக்கான எதிரான சட்டங்களை இயற்றியுள்ளது.
இதற்கு அங்குள்ள மியான் சமூகத்தினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்திக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா கூறியதாவது:
அசாமில், சிறுபான்மையின மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தேர்தலுக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மியான் சமூகம் செழிக்க வேண்டும். அந்த சமூகத்தில், பலதார மணம் அதிகமாக இருந்தால், அவர்கள் எப்படி முன்னேறுவர். குழந்தை திருமணம் தொடர்ந்தால், அவர்கள் எப்படி முன்னேறுவர்.
முஸ்லிம் சமுதாய பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்றவும், அவர்களை வாழ்க்கைத் தரம் உயரவும், இங்கு பா.ஜ., பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதில், பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்துக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களும் அடங்கும். இது நிச்சயம், பா.ஜ., கூட்டணிக்கு சாதகமாகவே அமையும். இதனால், எங்களின் வெற்றி எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

