நடிகர் விஜய் கட்சியில் சேர துாண்டில் போடும் பா.ஜ., புள்ளிகள்
நடிகர் விஜய் கட்சியில் சேர துாண்டில் போடும் பா.ஜ., புள்ளிகள்
ADDED : செப் 11, 2024 01:31 AM

சென்னை : தமிழக பா.ஜ.,வில் உள்ள சினிமா பிரபலங்கள், நடிகர் விஜய் கட்சியில் இணைய பேச்சு நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, 2021 சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட 'சீட்' வழங்கப்பட்டது. தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
பின், தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்த குஷ்புவுக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், தி.மு.க.,வுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
நடிகர் சரத்குமார், லோக்சபா தேர்தலின்போது, தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ.,வில் இணைத்தார்.
அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
நடிகர் செந்தில், நடிகை நமீதா, நடிகர் ராதாரவி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் என, பல சினிமா பிரபலங்கள் பா.ஜ.,வில் உள்ளனர். ஆனால், இவர்கள் அவ்வளவு பேரும், கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். இம்மாதம் கட்சியின் மாநாட்டை விஜய் நடத்த உள்ளார்.
பா.ஜ.,வில் உள்ள சினிமா பிரபலங்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் விபரம் அறிந்து கொண்ட விஜய் கட்சி நிர்வாகிகள் சிலர், அவர்களை த.வெ.க.,வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.
இதனால், பா.ஜ.,வில் தங்களுக்கு எந்த பதவியும் அளிக்கப்படாததால், அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், விஜய் கட்சியில் இணைவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக தெரியவந்து உள்ளது.