பணம் பதுக்கிய நிர்வாகிகள்: கமலாலயத்தில் குவியும் புகார்
பணம் பதுக்கிய நிர்வாகிகள்: கமலாலயத்தில் குவியும் புகார்
ADDED : மே 24, 2024 04:17 AM

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழக பா.ஜ., வேட்பாளர்களின் செலவுக்கு கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை பதுக்கிய நிர்வாகிகள் தொடர்பாக, அக்கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி உள்ளன.
இவை குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 19 தொகுதிகளில் பா.ஜ., நேரடியாக போட்டியிட்டது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.
பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் செலவுகளுக்கு, கட்சி மேலிடம் சார்பில் தலா, 15 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது.
பல தொகுதிகளில் முக்கிய நிர்வாகிகள், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பணம் வழங்காமல் பதுக்கி விட்டனர். தேர்தல் பிரசாரத்திற்காக பிற மாநிலங்களுக்கு சென்றுள்ள அண்ணாமலை, அடுத்த வாரம் சென்னை வருகிறார்.
இதற்கிடையில், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி வழங்கிய பணத்தை கட்சியினருக்கு வழங்காமல் பதுக்கிய மற்றும் தொழிலதிபர்களிடம் நன்கொடை வசூலித்த மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள் மீது, கமலாலயத்திற்கு தொடர்ந்து புகார் கடிதங்களை கட்சியினர் அனுப்பி வருகின்றனர்.
அவற்றை, அண்ணாமலையின் பிரதிநிதியாக உள்ள மூத்த மாநில நிர்வாகி ஒருவர் பிரித்து படித்து, அண்ணாமலையின் கவனத்திற்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, புகாருக்கு உள்ளான நிர்வாகிகள் மீது, விரைவில் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதி. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.